திருநெல்வேலி:தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி நேற்று (ஜூன் 5) பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடுவதற்காக வனத் துறையினர் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அழைத்து வந்தனர்.
நெல்லை மாநகர வழியாக பிரதான சாலையில் லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்ட அரிக்கொம்பன் யானை, மணிமுத்தாறு அணை அருகே உள்ள வன சோதனைச் சாவடி வழியாக காட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, அங்கிருந்து மாஞ்சோலை அடுத்த கோதையாறு அணையின் மேல் பகுதியில் அரிக்கொம்பன் யானையை விடுவதற்காக அழைத்து வந்தனர். பின் அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குள் யானை விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மிகவும் அச்சுறுத்தலாக உள்ள அரிக்கொம்பன் யானையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு பகுதி மக்கள் மணிமுத்தாறு வன சோதனைச் சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபடலாம் என்று தகவல் வெளியானதைத் தொடர்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அரிக்கொம்பன் யானை பாதுகாப்பாக நெல்லை வந்து சேர்ந்தது. பின்னர், தாழையூத்து அருகே சாலையோரம் யானை கொண்டு வரப்பட்ட வாகனத்தை வனத் துறையினர் திடீரென நிறுத்தினர். அப்போது, யானை மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தொடர்ந்து, யானை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிமுத்தாறு வனப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டது.