திருநெல்வேலி: கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரால் ‘திருநெல்வேலி பதிகம்’ பாடல் பெற்றது, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். இங்கு ஆடவல்லானின் ஆருத்ரா தரிசனம் நடக்கும் பஞ்ச சபைகளில் தாமிரசபை அமைந்துள்ளது. சிறப்பு பெற்ற இக்கோயிலில் கடந்த 28ஆம் தேதி மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது இதனை முன்னிட்டு 10 நாட்கள் நடராஜர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் அதிகாலை திருவெம்பாவை வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில் விழாவின் 10ஆம் நாளான இன்று (ஜன.6) தாமிர சபையில் சிவபருமான் நடனக்காட்சியான ஆருத்ரா தரிசனம் அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.
தாமிர சபையில் இன்று நடராஜ பெருமானுக்கு நள்ளிரவு 1 மணியளவில் திருமஞ்சனம், அதிகாலை 3.15 மணிக்கு பசு தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து தாமிர சபையில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் நடராஜருக்கு, சிறப்பு நடன தீபாராதனை நடைபெற்றது. ஓதுவாமூா்த்திகள் திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாடினா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடராஜர் திருநடனக் காட்சி நிக்ழந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:புதுக்கோட்டை ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம்!