திருநெல்வேலி: பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய, மாநில அரசுகள் குறைக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சைக்கிள் ஓட்டி வந்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் ஒன்றிய, மாநில அரசுகள் தான் வரி விதிக்கிறது.
தீபாவளி பரிசாக ஒன்றிய அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியைக் குறைத்தது. ஆனால், தமிழ்நாட்டில் திமுக அரசு இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறது.
தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் சமீபத்தில் தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விலை குறைக்கப்படவில்லை. மழை வெள்ளத்தால் ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.
அர்ஜூன் சம்பத் சைக்கிள் ஓட்டி வந்து மனு பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம் - அர்ஜூன் சம்பத்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்ப பெறுவதாகப் பிரதமர் அறிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, "ஒன்றிய அரசு ஜனநாயகத்தோடு செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டின் தூண்டுதலின் பேரில் விவசாயிகள் போர்வையில் சமூக விரோதிகள் வதந்தியைப் பரப்பினர்.
அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மக்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் தான் ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், இந்த திருத்தச் சட்டத்தால் விவசாயிகளுக்குப் பெரும் அளவில் நன்மை கிடைக்கும். எனவே, வேறு வழியில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நக்சல் போராட்டத்தால் சீக்கியர் கொல்லப்பட்டார். இருப்பினும் மக்கள் மத்தியில் பதற்றம் வேண்டாம் எனக் கருதி பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.
தேர்தலை மையப்படுத்தியே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக கேள்வி கேட்டபோது, "நல்லது செய்தால் தேர்தலுக்காக என்கிறார்கள்.
பிரதமர் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்துள்ளார். இதே வேளாண் திருத்தச் சட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவர்கள் நக்சலைட்டுடன் இணைந்து இந்தப் போராட்டங்களை நடத்தி வந்தார்கள்" என்றார்.
இதையும் படிங்க:Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு