திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூகரெங்கபுரம் எனும் ஊரில் 5ஆம் ஜார்ஜ் மற்றும் அவரின் மனைவி மேரி பட்டாபிஷேக நினைவு விளக்குத்தூண் கல்வெட்டுகள் 2 கண்டுபிடிக்கப்பட்டதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் கூறியதாவது, "சமூகரெங்கபுரம் ஒரு பழமையான ஊர் ஆகும். இவ்வூரின் மேற்குப் பகுதியில் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்புப் பகுதியில் நான்கு தூண்கள் அமைந்து காணப்படுகின்றன. அம்முகப்புத் தூண்களில் தெற்கு பகுதியிலிருந்து 2 ஆவது தூணில் ஒரு பெண் அகல்விளக்கு ஏந்தியபடி வடக்கு பார்த்த வண்ணம் நிற்கும் சிலை காணப்படுகிறது.
அச்சிலையின் கீழ் "மூலை வீடு சுப்பா ரெட்டியார் ஸ்திரி சின்னம்மாள்" என்ற குறிப்பு காணப்படுகிறது. மூன்றாவது தூணில் முறுக்கு மீசையுடன் கூடிய ஒரு ஆண் கை கூப்பி வணங்கும் நிலையில் ஒரு சிலை அமைந்து காணப்படுகிறது. அதன் கீழ் குறிப்பு எதுவும் காணப்படவில்லை. ஒரு வேளை அச்சிலை சுப்பா ரெட்டியாராக இருக்கலாம். கோயில் முகப்பின் வெளிப்பகுதி தூண்களில் 5 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அது போல கோயில் முகப்பின் உள்பகுதியில் இரண்டு தூண்கள் அமைந்துள்ளன. அதில் 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
கோயில் முகப்புத்தூண் அமைப்பு உபயச் செய்தி:கோயிலின் வெளி மற்றும் உள் முகப்புப் பகுதி தூண் கல்வெட்டுகள், 1911 ஆம் ஆண்டு ஆனி மாதம் எழுதப்பட்டுள்ளன. அதில் திருவனந்தபுரம் ஸ்ரீ கிருஷ்ணசாமி ரெட்டியார், மூலை வீடு சின்னம்மாள், ரெங்கநாத சுவாமி நெய் கம்பெனியார், அன்ன விஜய ரெங்க ரெட்டியார் மனைவி ஆவுடையம்மாள் ஆகியோர் கோயில் முகப்பு பகுதியை கல்தூண்கள் மற்றும் சிலைகளுடன் கட்டிக் கொடுத்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் பேரரசர் 5ம் ஜார்ஜ் முடிசூட்டு விழா செய்தி:இக்கோயிலின் முன்பகுதியில் ஒரு விளக்குத்தூண் காணப்படுகிறது. அதில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டு 1911 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் சக்கரவர்த்தியாகிய ஐந்தாம் ஜார்ஜ், அவரின் மனைவி மேரியும் அரசுப் பொறுப்பேற்று முடிசூட்டிக் கொண்ட செய்தி கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனை நினைவு கூரும் வகையில் கே.ரெங்கஸ்வாமி ரெட்டியார் கோயிலின் முன் விளக்குத்தூண் ஒன்று அமைத்ததாகவும் கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது.