திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் முத்து கேசவன் தலைமையில், வழக்கறிஞர்கள் நேற்று (ஆக. 10), நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், தங்களது சங்க உறுப்பினரும், வழக்கறிஞருமான செம்மணி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் பணகுடி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பழனி, உதவி ஆய்வாளர்கள் விமல்குமார், முகமது, காவலர்கள் செல்லத்துரை, சாகர், ஜோஸ் ஆகிய எட்டு பேர் எந்தப் புகாருமின்றி, கைது செய்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, மேற்கண்ட காவலர்கள் மீது சமீபத்தில் நெல்லை சிபிசிஐடி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட காவலர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதுடன், தொடர்ந்து வழக்கறிஞர்களை மிரட்டி வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து வள்ளியூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்து கேசவன் கூறுகையில், ”எங்கள் சங்க உறுப்பினர் செம்மணி என்பவரை கடந்த 2017ஆம் ஆண்டு காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் உள்பட எட்டு பேர், எந்தப் புகாருமின்றி கைது செய்து, கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாங்கள் முறையீட்டதன் விளைவாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நெல்லை சிபிசிஐடி காவல் துறையினர் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. எனவே அவர்கள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.