திருநெல்வேலி:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் இந்த உலகிற்கு வந்த 200ஆவது ஆண்டு தொடக்கவிழா, தருமசால தொடங்கி 156ஆவது விழா மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா பாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரிதர்ஷனி தலைமையில் நேற்று (அக்.23) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விழாவில் பேசுகையில், 'சாதி, மதம், இன வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும், பசியோடு வருபவர்களுக்கு பசிபோக்க வேண்டும் என்ற உயர்ந்த சித்தாந்தத்தைக் கொண்டவர் வள்ளலார்.
இன்றும் 156 ஆண்டுகளாக வடலூரில் வள்ளலாரின் ஜோதி அணையாமல் எரிவதைப்போல் வந்தவர்களுக்கு பசி போக்கும் வகையில் அடுப்பு அணைக்கப்படாமல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் கடவுளின் அவதாரமாக வாழ்ந்தவர். ஆகவே, அவரின் பெருமையை உலகறியச்செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பலகோடி ரூபாய் செலவு செய்து விழா எடுத்துள்ளார். 52 வாரங்கள் தமிழ்நாடு முழுவதும் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டதன் ஒருபகுதியாக, நெல்லையில் விழா நடத்தப்பட்டு வருகிறது. 'காலை சிற்றுண்டித் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம்' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் வள்ளலாரின் கொள்கைகளை அரகேற்றும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.