திருநெல்வேலி:ஏழை எளிய நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையில் ரயில் பயணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அவர்களின் வசதிக்காக அந்தியோதயா ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
’ஏழைகளின் ரதம்’ என்று அழைக்கப்படும் அந்தியோதயா ரயிலில், அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலிருந்து இருந்து நாகர்கோவில் வரை நாள்தோறும் இயக்கப்படும் அந்தியோதயா ரயில் இன்று (பிப்.15) வழக்கம் போல் திருநெல்வேலி வந்தடைந்தது.
அப்போது திடீரென நீண்ட நேரம் ரயில், அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் நாகர்கோவில் செல்ல வேண்டிய பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது, 'இந்த ரயில் இன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, எனவே அனைவரும் மாற்று வண்டியில் செல்லுங்கள்' என்று தெரிவித்துள்ளனர்.
டிக்கெட் எடுக்கும் போது, கவுன்ட்டர்களில் இது குறித்து எந்த ஒரு முன் அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே ஊழியர்களிடம் முறையிட்டனர். இதையடுத்து நாகர்கோவில் செல்ல வேண்டிய பயணிகளுக்கு குறிப்பிட்ட தொகை திரும்ப அளிக்கப்பட்டது. இருப்பினும், தாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பயணிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.