தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராதாபுரம் நயினார் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டு, பட்டயம்.. பேராசிரியர் கூறுவது என்ன? - ராதாபுரம் அம்மன் கோயில்

Radhapuram Amman temple: நெல்லை மாவட்டம் ராதாபுரம் வரகுணீச்சுரமுடைய நயினார்- கலியாண சவுந்தரி அம்மன் கோயிலில் 480 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், செப்புப் பட்டயமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் செம்பு பட்டயம்
கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் செம்பு பட்டயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 11:42 AM IST

திருநெல்வேலி: இந்துசமய அறநிலையத் துறையின் திருக்கோயில் சுவடித் திட்டப்பணியின் மூலம், கோயில்களில் உள்ள பழமையான அரிய ஓலைச்சுவடிகளை பரிமரித்து பாதுகாப்பதோடு, நூலாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருக்கோயில் சுவடித் திட்டப்பணிக் குழுவினர், புதிதாக 480 ஆண்டுகள் பழமையான செப்புப் பட்டயம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து சுவடித் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் சு.தாமரைப்பாண்டியனிடம் கேட்டபோது, "இராதாபுரம் வரகுணீச்சுரமுடைய நயினார்-கல்யாண சவுந்தரி நாச்சியார் அம்மன் திருக்கோயிலில் இருந்து செப்புப் பட்டயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

சுவடியியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன்

செப்புப் பட்டயத்தில் உள்ள செய்தி, கோயில் கருவறையின் மேற்கு பக்க மணிமண்டபத்தின் மேல்பகுதியில் கல்வெட்டாகவும் வெட்டி வைக்கப்பட்டுள்ளது. செப்புப் பட்டயமும், கல்வெட்டும் கோயில் சந்திப்பூசைக்கு வழங்கப்பட்ட நிலதானம் குறித்த செய்தியைப் பேசுகின்றன. செப்புப் பட்டயமும், கல்வெட்டும் கி.பி.1534ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

ராஜா பூதலவீர ஸ்ரீ ரவிவர்மன் அளித்த நிலதானம்: தொடர்ந்து பேசிய அவர், "ராஜா இரவிவர்மனின் முழுப்பெயர் புலி பூதள வீர உதயமார்த்தாண்டன் என்று வரலாறு வழி அறிய முடிகிறது. இவர் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளை ஆட்சி செய்ததாக வரலாற்று வழி அறிய முடிகிறது.

இவர் சுசீந்திரம், தோவாளை, தாழக்குடி ஆகிய ஊர்களின் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியுள்ளார். கி.பி.1522 முதல் 1544 வரை ஆண்டதாக வரலாற்று வழி தெரிந்து கொள்ள முடிகிறது. நமக்கு கிடைத்துள்ள செப்புப் பட்டயமும், கல்வெட்டும் ராஜா ரவிவர்மன் மூர்த்தா நாடு பகுதியை ஆண்டதாக குறிப்பிடுகிறது.

மூர்த்தா நாடு என்பதில் பணகுடி உள்ளிட்ட பகுதிகள் அடங்கி இருந்துள்ளன. மேலும், இவர் செய்துங்க நாட்டை ஆண்ட சங்கரநாராயணன் என்பவரை வென்றதாகவும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புடைய ராஜா ரவிவர்மன், தன் பெயர் விளங்க வரகுணீச்சுரமுடைய நயினார் - கலியாண சவுந்தரி அம்மன் கோயிலுக்கு சந்திப்பூசை நடக்க நிலதானம் செய்துள்ளார்.

ரவிவர்மன் வழங்கிய நிலதான எல்லை விவரம்:ராஜா ரவிவர்மன் மூர்த்தா நாட்டில் உள்ள இருக்கன் துறை என்று இன்று அழைக்கப்படும் சீவலப்பாடி நகர் பற்றில் சான்றான் குளம் (சாணான்குளம்) உள்ளிட்ட பற்றிலுள்ள நஞ்சையும், புஞ்சையும், கரைப்பற்றும் வழங்கியுள்ளார். அவர் வழங்கிய தான நிலத்தின் பெரிய நான்கு எல்லைகள் விவரம் தெளிவாக பட்டயத்திலும், கல்வெட்டிலும் கூறப்பட்டுள்ளன.

அதாவது, கீழ் எல்கை உப்பிலிகுளத்து நீர்நிலை குளுவாஞ்சேரி குளத்து நீர்நிலைக்கும் மேற்கு பகுதி என்று கூறப்பட்டுள்ளன. தென் எல்லைப்பகுதி கூடன்குளத்து வகைக்கு வடக்கு பகுதி என்று சுட்டப்பட்டுள்ளது. அதுபோல, மேல் எல்லை சங்கநேரிக்குளத்து எல்கைக்கு கிழக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு எல்லை இராதாபுரத்து எல்லைக்கு தெற்கு என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நான்கு பெரிய எல்லைகளுக்குட்பட்ட குளமும், புரவும், கரைப்பற்றும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், பூசங்குடியான இராசராசபுரம் பற்றுக்கு கீழ்ப்பால் இளையனார் குளத்து பற்று (இளையநயினார் குளம்) பகுதியில் வழங்கப்பட்ட நிலதான விவரமும், எல்லை விவரமும் சுட்டப்பட்டுள்ளன. கீழெல்கை முறக்குளப் பற்று எல்லைக்கு மேற்குத் தென் எல்லை கன்னியார் விளாகத்து நீர்நிலைக்கு வடக்கு என்று நவிலப்பட்டுள்ளது.

மேலெல்லை கூற்றுவனேரிக் கரைக்கு கிழக்கு என்று சொல்லப்பட்டுள்ளது. வடக்கு எல்லை கோட்டைக் கருங்குளம் பற்றுவகைக்கு தெற்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு பெரும் எல்லைக்கு உட்பட்ட குளமும் புரவும் கரைப்பற்று மட்டுமல்லாமல், குள மிரண்டிலுள்ள நஞ்சையும், புஞ்சையும், கரைப்பற்றும், மேல்நோக்கின மரமும், கீழ்நோக்கிய கிணறும் தானம் செய்யப்பட்டதாக சுட்டப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிரதமர் திருச்சி வருகை; 4 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை!

ABOUT THE AUTHOR

...view details