திருநெல்வேலி: திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில், ராணி ரஞ்சிதம் என்பவர் போட்டியிடுகிறார். இவர், நெல்லை மாவட்ட கூடுதல் காவல் ஆணையராக இருக்கும் வெள்ளத்துரையின் மனைவி. வெள்ளத்துரை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக வலம்வந்த பல்வேறு ரவுடிகளை சுட்டு வீழ்த்திய என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக தமிழ்நாடு காவல் துறையில் அறியப்படுகிறார்.
சந்தனக்கடத்தல் வீரப்பனை என்கவுன்ட்டர் செய்த குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். இவருடைய மனைவி, ராணி ரஞ்சிதம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தன்னை டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
அம்பாசமுத்திரம் அமமுக வேட்பாளர் ராணி ரஞ்சிதம் பிரத்யேகப் பேட்டி இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் ராணி ரஞ்சிதம், டிடிவி தினகரனை நேரில் சந்தித்து நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுள்ளார்.
துடிப்பான காவல் துறை அலுவலரின் மனைவி என்பதால், ராணி ரஞ்சிதத்துக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இவருக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி, தற்போது, அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட ஊர்க்காடு பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களுடன் எப்போதும், நான்கு கரைவேட்டி கட்டியவர்கள், வீட்டு வாசலில் ஐந்து, ஆறு கார்கள் இருப்பதை நம்மால் பார்க்கமுடியும். ஆனால், அதுபோன்ற எந்தவித ஆரவாரமுமின்றி ஊர்க்காடு பகுதியில், அவரை நம்மால் பார்க்க முடிந்தது.
தொடர்ந்து அவர் நமக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், தன் கணவர் தன்னுடைய அரசியல் பயணத்திற்கு என்றுமே தடையாக இருந்ததில்லை என்றும், காவல் துறையில் பணியாற்றி தனது கணவர் மக்களுக்கு சேவையாற்றிவருகிறார் எனவும், தான் அரசியலில் மக்களுக்குச் சேவையாற்றிவருகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அந்த நேர்காணலில், "அம்பாசமுத்திரம் தொகுதியில் என்னை மக்கள் வெற்றி பெறச் செய்தால், விவசாய பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அதேபோல், தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பேன். திருச்சியில் பேராசிரியராக இருந்தபோதே மக்கள் சேவையில் எனக்கு அதிக விருப்பம் உண்டு.
டிடிவி தினகரனின் கொள்கைகள் பிடித்ததால் அவரது கட்சியில் இணைந்தேன். எனது அரசியல் பயணத்துக்கும் எனது கணவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உள்ளூர் அமமுக நிர்வாகிகள் எனக்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். எனவே, இந்தத் தேர்தலில் 100 விழுக்காடு நான் வெற்றி பெறுவேன்" என்றார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகிய இரண்டு விஐபிகள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் ஒரு காவல் துறை அலுவலரின் மனைவியாக அமமுகவின் வேட்பாளராக களமிறங்கும் ராணி ரஞ்சிதம் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க:கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!