தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்த வழக்குகள்..பேருந்தில் தொலைதூரப் பயணம்..!அமர்பிரசாத் ரெட்டியை அலறவிடும் காவல்துறை..பின்னணி என்ன? - அம்பாசமுத்திரம் நீதிமன்றம்

Amar Prasad Reddy arrested: பாஜகவில் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி அடுத்தடுத்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர் அரசு பேருந்து மூலமாக அழைத்துச் செல்லப்படதற்கான காரணத்தை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Amar Prasad Reddy was taken from ambasamudram to Chennai by a government bus
அம்பாசமுத்திரத்தில் இருந்து அரசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 10:40 PM IST

அம்பாசமுத்திரத்தில் இருந்து அரசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி

திருநெல்வேலி:தமிழ்நாடு பாஜகவில் இளைஞர் மற்றும் விளையாட்டு பிரிவு மாநில தலைவராக இருப்பவர், அமர் பிரசாத் ரெட்டி. இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றிய போது, ஜேசிபி இயந்திரத்தை உடைத்ததாக போடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர் பிரசாத் ரெட்டி மீது தமிழக காவல்துறை மேலும் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த அண்ணாமலை நடைபயணத்தில் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமர் பிரசாத் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் 10 பேர் மற்றும் அடையாளம் காணக்கூடிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

எனவே, இந்த வழக்கிலும் சிறையில் இருந்த அமர் பிரசாத் ரெட்டி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பொட்டல்புதூர் வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்த அமர் பிரசாத் ரெட்டியை நேற்று முன்தினம் புழல் சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டத்துக்கு அரசு பேருந்தில் அழைத்து வந்தனர்.

தொடர்ந்து, நேற்று அம்பாசமுத்திரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர் பிரசாத் ரெட்டி அம்பாசமுத்திரம் நீதிமன்ற நீதிபதி பல்கலைச் செல்வன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு நீதிபதி இந்த வழக்கில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் அம்பாசமுத்திரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமர் பிரசாத் ரெட்டி இன்று (நவ.4) மீண்டும் அரசு பேருந்து மூலம் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அமர் பிரசாத் ரெட்டி பாஜகவில் அதிக செல்வாக்கோடும் முக்கிய பிரபலமாகவும் தன்னை காட்டிவந்தார். குறிப்பாக இவர், விலை உயர்ந்த கார்களை தான் பயன்படுத்துவார். அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான இவர், கட்சியிலும் மாநில பொறுப்பில் இருந்து வருகிறார். எனவே, போலீசார் இவரை வழக்கு விசாரணைக்காக சென்னையிலிருந்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வருவார்கள் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், சென்னையில் இருந்து சாதாரண கைதிகளைப் போன்று போலீசார் அமர் பிரசாத் ரெட்டியை அரசு பேருந்திலேயே அழைத்து வந்தனர். அதேபோல், வழக்கு விசாரணை முடிவடைந்த பிறகு இன்று மீண்டும் அமர் பிரசாத் ரெட்டி அம்பாசமுத்திரத்தில் இருந்து பேருந்தில் நெல்லை புதிய பேருந்து நிலையம் அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் வந்த நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இல்லாத காரணத்தால் திருப்பூர் செல்லும் பேருந்தில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மதுரையிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் பேருந்து மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, கைதிகள் என்றால் அனைவரும் சமம் தான் அவர்களை இந்த வாகனத்தில் தான் அழைத்து வர வேண்டும் என சட்டம் எதுவும் இல்லை. ஒருவேளை சம்பந்தப்பட்ட கைதி மிக பிரபலமான ரவுடியாகவோ அல்லது மிக முக்கிய பிரமுகராகவோ இருந்தால் பாதுகாப்பு கருதி மட்டுமே அவரை போலீஸ் வாகனத்தில் தனியாக அழைத்துச் செல்வோம்.

அப்படி இல்லை என்றால் சக கைதிகளை போல், பேருந்தில் அழைத்துச் செல்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், அமர் பிரசாத் ரெட்டிக்கு உயர் பாதுகாப்பு எதுவும் தேவையில்லை என்பதால் வழக்கம் போல், பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், அமர் பிரசாத் ரெட்டி பேருந்தில் அழைத்து வரப்பட்டதன் பின்னணியில் அரசியல் ரீதியான காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஏற்கனவே, தமிழகத்தில் பாஜக - திமுக இடையே கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களை கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்.

குறிப்பாக, திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை (DMK Files) சமீபத்தில் வெளியிட்டார். அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு திமுக - பாஜக மோதல் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கையாண்டு வருகிறது.

இதனால், திமுக - பாஜக இடையேயான மோதல் முற்றிவரும் சூழ்நிலையில் ஐடி மற்றும் இடி சோதனைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக திமுக மேலிடம் காவல்துறை மூலம் பாஜக நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்தில் தொடர்ச்சியாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

குறிப்பாக, இன்று கூட சென்னையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்த மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக, சின்னத்திரை நடிகை ரஞ்சனா நாச்சியாரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் பாஜக நிர்வாகிகளுக்கு திமுக மேலிடம் மறைமுக எச்சரிக்கை கொடுப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details