தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் மழைநீரை அகற்றுவதிலும் சாதி பாகுபாடா? முழுப் பின்னணி என்ன? - Nellai Rain news

Nellai News: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் மழைநீரை அகற்றுவதில் கூட சாதி பாகுபாடு உள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் அலசுகிறது, இந்த சிறப்பு தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 8:31 AM IST

நெல்லையில் மழைநீரை அகற்றுவதிலும் சாதி பாகுபாடா?

நெல்லை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழையும் பதிவாகி வருகிறது. அம்பாசமுத்திரம் அருகே சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர் மழையால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்திருப்பதால் கொசுக்கள் அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், சேரன்மகாதேவி பேரூராட்சி 18வது வடக்கு உட்பட்ட அண்ணா நகர் நான்காவது தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளைச் சுற்றியுள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

ஏற்கனவே, தொடர் மழை பெய்து வருவதால் தேங்கிய மழைநீர் வற்றாமல் துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாவதால் அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற நோய் பாதிப்புகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்று, தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இரண்டாவது வார்டு கவுன்சிலர் தேவியிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சம்பந்தப்பட்ட பேரூராட்சி தலைவர் மற்றும் அத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தற்போது வரை, மழைநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண்கள் நாள்தோறும் அழுக்கடைந்த அந்த தண்ணீரை மிதித்து கடைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், 'கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக இப்பிரச்சனை இருக்கிறது; நாங்களும் பலமுறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டோம். இருப்பினும், நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது விரைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேதனையோடு தெரிவித்தனர்.

இதேபோல் 18வது வார்டுக்குட்பட்ட அசோக்நகரில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வார்டின் கவுன்சிலர் தேவி கூறுகையில், 'எனது வார்டில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளும் இப்பகுதிக்கு செய்து தருவதில்லை. என்னதான் தீர்மானம் பல போட்டாலும் அவைகள் மூலம் எனது வார்டிற்கு ஒரு பலனும் கிடைப்பதில்லை.

தற்போது, அண்ணாநகரில் மழைநீர் தேங்கியிருப்பது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். பள்ளங்களில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு மோட்டர்கள் தருவதாக கூறினாலும், அவற்றை தராமல் உள்ளதாகவும்; பள்ளமான இடங்களில் மண் அடித்து தராமலும் உள்ளனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவகையான நோய்த் தொற்றுக்கு ஆளாவது என்னவோ, எனது தொகுதி மக்கள் தான் என வருந்தினார்.

இவ்வாறு முன்வைக்கும் கோரிக்கைகளை புறக்கணிப்பதற்கான காரணம் என்ன? என செய்தியாளரின் கேள்விக்கு, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் எனது வார்டை புறக்கணிக்கின்றனர் என வேதனையுடன் கூறினார்.

ஏற்கனவே, நெல்லை மாவட்டத்தில் சாதிய பிரச்னை காரணமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாங்குநேரியில் பள்ளி மாணவனை சாதிய வன்மத்தால் சக மாணவர்களே கொடூரமாக அரிவாளால் வெட்டினர். தொடர்ந்து சாதி ரீதியான சில கொலை சம்பவங்களும் நெல்லையில் அரங்கேறின. இதுபோன்ற நிலையில், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் ஆளுங்கட்சி கவுன்சிலராக இருந்தும் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக கவுன்சிலர் தேவி குற்றம்சாட்டியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதரை நமது ஈடிவி பாரத் சார்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில், அவர் 'அண்ணாநகர் பகுதியில் தொடர்ந்து கொசு மருந்து அடித்து வருகிறோம். மழைநீர் தேங்கியிருப்பதாக எனது கவனத்துக்கு வரவில்லை. நான் இரண்டு நாட்கள் மீட்டிங் சென்றுவிட்டேன். ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சி காரணமாக, சாதி பாகுபாடு காட்டுவதாக கவுன்சிலர் கூறுகிறார். அப்படி நடக்கவில்லை' என தெரிவித்தார்.

அதேசமயம் பலமுறை செயல் அலுவலரிடம் இப்பிரச்னை குறித்து நேரில் முறையிட்டுள்ளதாக கவுன்சிலர் தேவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும் பாதிப்பு மக்களுக்கு தான். மழைநீர் சூழ்ந்த பகுதியில் கொசுக்களோடும் நோய் தொற்றுடனும் போராட வேண்டிய நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியமானது. இதை மனதிற்கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

இதையும் படிங்க:“தமிழ் மொழி இறந்து வருவது குறித்து இங்குள்ள ஆட்சியாளர்கள் கவலைப்பட்டது உண்டா?” - சீமான் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details