தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுக - பாஜக பிரிவு என்பது இஸ்லாமியர்கள் ஓட்டை குறித்து நாடகம்" - சுப.வீரபாண்டியன் கருத்து!

Suba Veerapandian: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது இஸ்லாமியர்களின் வாக்குகளை குறிவைத்த நாடகம் என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் விமர்சனம் செய்துள்ளார்.

aiadmk and bjp
அதிமுக பாஜக பிளவு நாடகமே

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 5:04 PM IST

சுப.வீரபாண்டியன் பேச்சு

திருநெல்வேலி:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு, மற்றும் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் மேலப்பாளையத்தில் சிறுபான்மை நல உரிமைப்பிரிவு அமைப்பாளர் நவ்சாத் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், "சொன்னதைச் செய்யும் ஆற்றலும், திறமையும் உடைய கருணாநிதி மறையவில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியாய் வாழ்கிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கி உள்ளார்.

காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். ஆனால், பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுதான் நூறுநாள் வேலைத் திட்டம், இந்த திட்டம் வேண்டும் என்று இந்தியா முழுவதும் 1 கோடியே 96 லட்சம் பேர் விரும்புகிறார்கள் என புள்ளி விவரம் கூறுகிறது.

எந்த வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. வறுமையின் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தான் தற்போது முன்னேறி அங்கு ஒரு டாலரின் மதிப்பு 79 ஆப்கானிகள், வளர்ந்த நாடு என்று கூறும் இந்தியாவில் ஒரு டாலரின் மதிப்பு 83 ரூபாய் இந்தியாவின் பொருளாதாரத்தை பாஜக பின்னுக்குத் தள்ளி உள்ளது.

மோடி தொடங்கி அண்ணாமலை வரை பொய்களை மட்டுமே கூறி வருகின்றனர். அதிமுக பாஜக பிரிந்தது போல் பாவனை காட்டுகிறார்கள் காரணம் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறவேண்டும். இஸ்லாமியர்கள் உங்கள் பக்கம் ஒருகாலமும் வரமாட்டார்கள். இஸ்லாமியர்கள் எத்தனை காலம் உறவு எங்களுக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அண்ணா, பெரியார், காமராஜர் காலத்திலிருந்த பண்பும், உண்மையும் மிகுந்த அரசியலை பாஜக சீரழித்து வருகிறது. பாஜக ஆட்சியில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. மேலும், மணிப்பூரில் 150 நாட்களாகக் கலவரம் நடக்கிறது. ஆனால் அங்குச் செல்ல பிரதமருக்கு நேரமில்லை, பேசவும் இல்லை, மணிபூரில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. 171 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள். இதில் 95 பேரின் சடலங்களைப் பெற யாரும் முன்வரவில்லை காரணம் அவரின் உறவினர் என்று கொலை செய்யக் கூடும் என்ற அச்சத்தில் தான்.

எந்த காலத்திலும் திராவிட மாடலை உயர்த்தி பிடிப்போமே தவிர, மணிப்பூர் மாடலுக்கு தமிழகத்தில் இடமில்லை, தமிழகத்தில் என்ன முயற்சி செய்தாலும் தாமரை ஒரு இடத்தில் கூட மலராது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான வெற்றியைப் பெற்றுத்தரும் நம்பிக்கையை இந்தியா (I.N.D.I.A) கூட்டணி உருவாக்கி உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்லும். பாஜகவிற்கு இனி இடமில்லை, தமிழகத்திலும் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார். எப்போதும் திமுக தான் ஆளும்கட்சி, அதிமுக தான் எதிர்க்கட்சி பாஜகவிற்கு இடம் இல்லை’ எனப் பேசினார்.

இதையும் படிங்க:சில்லரை வாங்குவது போல் நடித்து ரூ.6 லட்சம் தங்கம் அபேஸ்! வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details