நெல்லை குறுக்குத்துறை ரயில்வே கேட் அருகே நேற்று(நவ.30) மாலை தண்டவாளத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மருத மரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதை கவனித்த ரயில்வே கேட் கீப்பர், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 100 அடி உயரமுள்ள அந்த மரத்தின் நடுப்பகுதியில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததில் மரத்தின் வெளிப்பகுதியில் எரிந்த தீ முற்றிலும் அணைந்தது. ஆனால், மரத்தின் நடுவே இருந்த துளை வழியாகத் தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தீ அணையவில்லை.
ரயில்வே காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மரத்தின் அடியில் குப்பையை தீ வைத்து கொளுத்தியபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் கன்னியாகுமரி விரைவு வண்டி சரியாக 6.47 மணியளவில் அந்த வழியாக வந்தது. ஆனால், தண்டவாளத்தின் மிக அருகில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாப்புக்கருதி கன்னியாகுமரி விரைவு வண்டி நடுவழியில் நிறுத்தப்பட்டது.