தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை கனமழை வெள்ளத்தால் இதுவரை 7 பேர் உயிரிழப்பு.. மாவட்டம் முழுவதும் 70,000 ஏக்கர் விளை நிலங்கள் சேதம்!

Tirunelveli flood 2023: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், நெல்லை மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சந்தித்த இழப்புகள், சேதங்கள் அதிர்ச்சியடையும் வகையில் உள்ளது.

மழை வெள்ளத்தால் நெல்லையில் ஏற்பட்ட பாதிப்புகள்
மழை வெள்ளத்தால் நெல்லையில் ஏற்பட்ட பாதிப்புகள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 12:14 PM IST

Updated : Dec 20, 2023, 12:32 PM IST

மழை வெள்ளத்தால் நெல்லையில் ஏற்பட்ட பாதிப்புகள்

திருநெல்வேலி: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆறு மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு, தென் மாவட்டத்தையே புரட்டிப் போட்டது.

பொதுவாக தென் மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பெருமளவு மழை இல்லாமல் இருந்தது. மேலும், டிசம்பர் மாதத்தில் இரண்டு வாரங்கள் கடந்ததை அடுத்து, மழை இருக்காது என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைத்திருந்தனர்.

ஆனால், திடீரென டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு நெல்லையில் கனமழை பெய்யத் தொடங்கியது. வழக்கம்போல் சில மணி நேரம் பெய்து விட்டு ஓய்ந்துவிடும் என்று எண்ணிய நிலையில், அந்த கனமழை வழக்கத்து மாறாக தென்பட்டது.

அவ்வாறு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை, 18ஆம் தேதி வரை கனமழையாக கொட்டித் தீர்த்தது. சுமார் 35 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. அதனை அடுத்து அனைத்து அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளம் சேர்த்து, தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடியது. இதனால், அன்று இரவு நெல்லை மாநகரம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

கடந்த 100 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை காணாத மக்கள், குறிப்பாக தாழ்வான இடங்களில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பதற்றம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் சாலை சேதமடைந்ததால், நெல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால் மாநகரமே தனித் தீவு போல் காட்சி அளித்தது.

இந்நிலையில், நேற்று (டிச.19) முதல் நெல்லையில் மழை பெய்வது ஓய்ந்ததை அடுத்து, வெள்ள நீர் படிப்படியாக வடியத் தொடங்கியது. இருப்பினும், வீடுகளைச் சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்களின் உடைமைகள் முற்றிலும் சேதமடைந்ததால் பரிதவித்து வருகின்றனர்.

குறிப்பாக, மாநகரில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வேன், லாரி, பைக் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மேலும், நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் அளவில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் கூறும்போது, "நெல்லையில் பெய்த கனமழையில் இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தில் காணாமல் போன 2 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. மேலும் மாவட்டம் முழுவதும் 70 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாவட்டம் முழுவதும் உள்ள 40 துணை மின் நிலையங்களில் 8 மின் நிலையங்கள் மழை வெள்ளத்தால் சேதமாகியது. அதில் 7 மின் நிலையங்கள் சீர் செய்யப்பட்டு விட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்து 535 மின் மாற்றிகளில் 1,500க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 720 மின்மாற்றிகள் சீர் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாநகரில் குடிநீர் குழாய் அடைப்பு சரி செய்யப்பட்டு, நாளைய முதல் பொதுமக்களுக்குச் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். புறநகர் பகுதிகளில் தற்காலிகமாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் மழை வெள்ளத்தால் சேதமாகியுள்ளது. 840 ரேஷன் கடைகளில் 62 கடைகள் பாதிப்படைந்துள்ளது. அதை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்: பாபநாசம், அகத்தியர்பட்டி, அய்யனார்குளம், சங்கரபாண்டிகுளம், சேரன்மகாதேவி, கொழுமடை, கல்லிடைக்குறிச்சி, மேலச்சேவல், முக்கூடல், களக்காடு, நாங்குநேரி, செட்டிகுளம், திசையன்விளை, ராதாபுரம், மிட்டார்குளம், கூடங்குளம், பாளையங்கோட்டை, மனக்கவலம்பிள்ளை நகர், வண்ணாரப்பேட்டை, கொக்கரக்குளம், நெல்லை சந்திப்பு, உடையார்பட்டி, சிந்து பூந்துறை, தச்சநல்லூர், நெல்லை டவுன், பேட்டை.

இன்னும் வெள்ள நீர் வடியாத இடங்கள்: நெல்லை சந்திப்பு, நெல்லை வடக்கு பைபாஸ் சாலை, முக்கூடல், மேலச்செவல் கொழுமடை, களக்காடு.

இதையும் படிங்க:வெள்ளத்தின் நடுவே 39 மணிநேரம் உணவு உறக்கமின்றி மரக்கிளையில் தவித்த முதியவர் மீட்பு..!

Last Updated : Dec 20, 2023, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details