திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று (செப்.09) தனது தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். குறிப்பாக விவசாயம், சாலை வசதி, சுற்றுலா உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'அம்பாசமுத்திரம் தொகுதியில் பத்து கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். இது விவசாயம் நிறைந்த தொகுதி, கண்ணடியன் கால்வாய், மேலழிகியன் கால்வாய், நதியுண்ணி கால்வாய் ஆகிய கால்வாயில் விவசாயிகளுக்கு சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை.
இந்த கால்வாய்களிலும் தரைத்தளம் அமைப்பது உள்பட சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்படி ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். அதேபோல் பாபநாசம் கோபாலசமுத்திரம் வரை நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாபநாசம் அணையில் இருந்து பாண தீர்த்தம் அருவிக்கு சோலார் மின்சாரம் மூலம் பசுமைப்படகு, போக்குவரத்து, ஏற்படுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளேன். அகஸ்தியர் அருவியில் பொதுமக்களை அனுமதிக்க மறுப்பதால், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட உள்ளூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்தும் ஆட்சியரிடம் முறையிட்டுள்ளேன்.