நெல்லையில் தடபுடலாக நடந்த அதிமுக கறி விருந்து திருநெல்வேலி: மதுரையில் கடந்த மாதம் 20ஆம் தேதி அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. அம்மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரான பிறகு நடைபெற்ற முதல் மாநாடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
இந்த மாநாட்டிற்காக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது முழு உழைப்பையும், ஒத்துழைப்பையும் வழங்கி இருந்ததாகவும், அவர்களை பாராட்டும் விதமாகவும், இன்று நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை.கணேசராஜா அனைவரையும் அழைத்து மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கறி விருந்து ஏற்பாடு செய்து, தானே தொண்டர்களுக்கு பரிமாறினார்.
மேலும், அதிமுகவின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஏற்பாடு செய்து இருந்த கறி விருந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், கறி விருந்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் தாங்கள் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர்.
மதுரையில் நடந்த எழுச்சி மாநாட்டில் உணவு தரமற்ற முறையில் பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் பெரிய அளவில் சாப்பிடாததால், டன் கணக்கில் சாப்பாடு வீணாகியது. மேலும், மக்கள் அது குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனமும், விமர்சனங்களும் தெரிவித்தனர்.
எனவே, மாநாட்டின்போது சாப்பாடு விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடான செயலகளால் கட்சித் தலைமை மீது தொண்டர்கள் அதிருப்தியில் இருந்ததாகவும், தொண்டர்களை மகிழ்விக்க மாவட்டந்தோறும் சிறப்பான விருந்தளிக்க அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனையடுத்து நெல்லையில் இன்று மாவட்டச் செயலாளர் சார்பில் தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, குழி ஆம்லேட் என அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை.கணேசராஜா, முன்னதாக மதுரை எழுச்சி மாநாடு வெற்றியை கொண்டாடும் வகையில் நெல்லையப்பர் கோயில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாகவும், தற்போது மாவட்டம்தோறும் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன்முடிக்கு எதிரான வழக்கை யார் விசாரிப்பது? என முடிவெடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை