சென்னை:தாம்பரம் மாநகராட்சி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி முதல், பெண் மேயராக வசந்தகுமாரியும், துணை மேயராக கோ. காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டம் இன்று மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ. காமராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதாரண கூட்டமாக 171தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவசர தீர்மானமான 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்தும் தாம்பரம் மார்க்கெட் வியாபாரிகள் கடைகள் அகற்றபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் 9 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டபடி வெளியில் வந்தனர்.
கோயம்புத்தூர்:கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் முன்பு அவர்கள் வார்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வை கண்டிக்கும் விதமாக அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் கறுப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான பணிகள் செய்யப்படவில்லை என அடிக்கடி தெரிவித்து வந்த நிலையில் இதற்கு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரிடம் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அதிமுக கவுன்சிலர் அவரது கோரிக்கையை தெரிவிக்கும்போது கோவை மாநகராட்சியில் மக்களிடம் வரி வசூல் ஆனது சில இடங்களில் மிரட்டி பெறப்படுகிறது எனத் தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரை திமுக கவுன்சிலர் செல்வா தள்ளிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வெளிநடப்பு செய்தனர்.
திருநெல்வேலிமாநகராட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றதில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி 51 வார்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து திமுக சார்பில் மாநகராட்சி மேயராக சரவணன் துணை மேயராக ராஜூ பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு நான்கு மண்டல குழு தலைவர்களும் பொறுப்பேற்ற நிலையில் நெல்லை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.