திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. மேயராக இளைஞரணியைச் சேர்ந்த பி.எம் சரவணன் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் மேயர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை எனவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக 38 திமுக கவுன்சிலர்கள் “நம்பிக்கையில்லா தீர்மானம்” கொண்டு வரும்படி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். இச்சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இது குறித்து அதிமுகவின் நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா கூறுகையில், “நெல்லை மாநகராட்சியில் உள்ள 80 சதவீத கவுன்சிலர்கள் மூலம் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சியை முடக்குவது மட்டும் அல்லாமல், தனி அதிகாரியை நியமித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும். மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவிக்கும். தற்போது உள்ள நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால், கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம்.
நெல்லை மாநகராட்சி உறுப்பினர்கள் போராடுவது சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவை தொடர்பான பிரச்னைகளுக்கு இல்லை, காண்ட்ராக்டர் மற்றும் தொழிலதிபர்களிடம் வாங்கிய வசூல் பணத்தை, பங்கு வைப்பதில்தான் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை இல்லாத கவுன்சிலர்கள் தற்போது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. 2.85 கோடி ரூபாய் மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.
எது எப்படியோ, தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அதிமுக கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள். மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், சங்கரன்கோவில் நகராட்சியில் நடப்பது போல குதிரை பேரத்துக்கு வழிவகுத்து விடும். சுமார் ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியின் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள திமுக அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல் பாதிப்பு; ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!