திருநெல்வேலி:நெல்லை அம்பாசமுத்திரம் அருகே உள்ள வி.கே.புரம் மூன்று விளக்கு திடல் பகுதியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக இன்று (ஜூன் 26) கலை விழா நடைபெற்றது. விழாவில் திரைப்பட நடிகையும், சங்கத்தின் துணை தலைவருமான ரோகிணி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் பாடல், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பின்னர் வி.கே.புரம் பகுதியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய நடிகை ரோகிணி கல்விக்கொள்கை குறித்தும் மத்திய அரசு குறித்தும் பேசினார். அப்போது பேசிய அவர், "படித்துவிட்டு வேலையின்றி எத்தனை பேர் இந்தியாவில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை யோசிக்காத, மக்களுடைய வாழ்க்கை முறையை பற்றி கவலைப்படாத ஒரு கல்வி கொள்கையை இங்கு திணிக்கிறார்கள்.
கல்விக்கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதம், இந்தி படிக்கச் சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் படித்தால் அர்ச்சனை செய்யக்கூடிய வேலை மட்டுமே கிடைக்கும். சமஸ்கிருதம் படித்தால் நமது குழந்தைகளுக்கு அர்ச்சகர் வேலை கொடுப்பார்களா?. இவர்களுக்கு வேலையாட்கள் வேலையாட்களாகவே இருக்க வேண்டும், வசதி வாய்ந்தவர்களின் குழந்தைகள் தான் அதிகாரத்தில் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும் என்பதற்காகத் தான் இத்திட்டம் உள்ளது. இது வேண்டாம் என ஆரம்பத்திலேயே பேசி இருக்கிறோம் ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.