திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இன்று (டிச.30) நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மாதா மாளிகை திருமண மண்டபத்தில் வைத்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வீட்டை இழந்தவர்களுக்கும் அவர் நிதி உதவியும் வழங்கினார்.
இதற்காக அவர் இன்று மதியம் 12 மணி அளவில் தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து, சாலை மார்க்கமாக பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள மாதா மாளிகைக்கு வந்தார். இதையடுத்து, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள பயனாளிகளை, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர் மன்றத்தினர் தேர்வு செய்து, மாதா மாளிகைக்குள் அனுப்பி வைத்தனர்.
அவர்களுக்கு அங்கு, அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் தொகுப்பையும், வேஷ்டி, சட்டை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் விஜய் வழங்கினார். சுமார் 1,500 பேருக்கு அறுசுவை மதிய உணவும் அங்கு தயாரிக்கப்பட்டு, வழங்கப்பட்டது. மேலும், மழை வெள்ளத்தின்போது மின்வாரிய பராமரிப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராபின்சன் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.