தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம், இன்று (செப்.08) நெல்லை மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கிருந்த மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது வேலூர் இப்ராஹிம், 'நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையிலும் எதிர்க்கட்சிகளின் பொய்ப் பரப்புரையில் உள்ள உண்மை நிலையை விளக்கவும் குமரி முதல் மெரினா வரை விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கியுள்ளோம். இதில், பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது. எங்களின் விழிப்புணர்வு பரப்புரைக்குப் பல்வேறு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. காவல் துறையும் அதைக் காரணமாக வைத்து எங்கள் பரப்புரையைத் தடுக்க நினைக்கின்றனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தான் எங்கள் பரப்புரையைத் தடுக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.