பாரம்பரியத்தை காக்கப் போராடும் இளம் பட்டதாரி: 5-வது தலைமுறையாக களமிறக்கம்! திருநெல்வேலி: தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஆரம்பத்தில் பொதுமக்கள் பொங்கல் வைப்பதற்கு பாரம்பரியமாக மண்பானைகளை பயன்படுத்தினர். காலப்போக்கில் பித்தளை பானை, சில்வர் பானை என எளிய முறையில் பிற பாத்திரங்களில் பொங்கல் வைக்கத் தொடங்கினர்.
குறிப்பாக, மண்பானைக்கு அடுத்தபடியாக பொங்கல் வைப்பதில் பித்தளை பானை தான் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே, இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி நெல்லை மாவட்டத்தில் பித்தளை பானை தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையைப் பொறுத்தவரை பழைய பகுதியில் 100க்கும் மேற்பட்ட பித்தளை பாத்திரம் உற்பத்திக்கூடங்கள் உள்ளன. இங்கு பொங்கல் பானைகள் மட்டும் இல்லாமல், சமையலுக்குத் தேவையான பிற பாத்திரங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்போது பொங்கல் பண்டிகை என்பதால், பொங்கல் பானை உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்,தொழிலாளர்கள். குறிப்பாக சுமார் 80 ஆண்டுகளாக பித்தளை பானை தயாரிப்பில் ஈடுபடும் நெல்லை டவுனை சேர்ந்த வெங்கடாசலம் குடும்பத்தினர், 5ஆவது தலைமுறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில், 5-வது தலைமுறையான இளம் பட்டதாரியை இத்தொழிலில் களமிறக்கியுள்ளனர்.
அதாவது வெங்கடாசலம் மகன் ராஜா நான்காம் தலைமுறையாக பித்தளை பானை தயாரிப்பில் ஈடுபட்ட நிலையில், தற்போது அவரது மகன் வெங்கட் வசந்த் ஐந்தாவது தலைமுறையாக தனது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். வெங்கட் வசந்த், முதுகலை பட்டம் முடித்தும் பாரம்பரியமான தொழில் என்பதால் அதை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பேட்டையில் உள்ள தனது தொழிற்கூடத்தில் வைத்து, வெங்கட் வசந்த் தொழிலாளர்களைக் கொண்டு பொங்கல் பானைகள் உற்பத்தி செய்கிறார். இவர்கள் கூடத்தில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. பித்தளை தகடுகளைத் தேவையான அளவுக்கு வெட்டி, தீயில் உருக்கி, தொழிலாளர்கள் பானையை வடிவமைக்கின்றனர்.
பின்னர், பானையை பட்டை தீட்டி, ஒளிரும் தங்க நிறத்தில் ஜொலிக்க வைக்கின்றனர். இந்நிலையில் விலைவாசி உயர்வு காரணமாக, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இந்த ஆண்டு பொங்கல் விற்பனை மந்தமாகவே இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பானை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் வெங்கட் வசந்த் கூறும் போது, "எனது குடும்பத்தில் ஐந்தாவது தலைமுறையாக நான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். சில்வர், அலுமினியப் பாத்திரங்களைக் காட்டிலும் பித்தளையில் அதிக மருத்துவப் பயன்பாடு உள்ளது. மூலப் பொருட்களின் விலை கடந்த ஓராண்டில் பல மடங்கு அதிகரித்திருப்பதால் பானையின் விலையும் அதிகரிக்கிறது, இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பித்தளை பானை வாங்குவதைச் செலவாக பார்க்காமல் ஒரு பாரம்பரியமாக எண்ணி வாங்க வேண்டும்" எனக் கூறினார்.
கடந்த 40 ஆண்டுகளாக பித்தளை பானை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளி கோடீஸ்வரன் கூறும்போது, "ஒன்பது வயதில் இருந்து இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது வரை, தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை, விலைவாசி உயர்வு தான் அதற்குக் காரணம். காப்பருக்கு இணையாக பித்தளையின் விலை அதிகரித்திருப்பதால், தொழில் பெரிதும் நலிவடைந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொங்கல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Sirkazhi: வானகிரி கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உருளை!