திருநெல்வேலி: மன்னார்புரம் அருகே உள்ள அணைக்கரை - பெட்டைகுளம் சாலையில் அணைக்கரை கிராமத்தில் திருமணம் மற்றும் கொடை விழாக்களில் பயன்படுத்தப்படும் வாண வேடிக்கை வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை இடச்சிவிளையை சார்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி கலா என்பவரின் பேரில் உரிமம் உள்ளது. மேலும் வருகிற மார்ச் மாதம் வரை இந்த தொழிற்சாலை இயங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள வெடிபொருள்களுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி பொருட்கள் அனைத்தும் வெடித்ததில் தொழிற்சாலையின் மேற்கூரை மற்றும் சுவர்கள் வெடித்து சிதறின. இதில் அங்கு பணியாற்றி கொண்டிருந்த ராஜ்குமார் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலையே பரிதாபமாக வெடி விபத்தில் பலியானார். மேலும் பாலா என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வந்த திசையன்விளை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான ராஜ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜ்குமார் உடன்குடியை சேர்ந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.