திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் ஆவார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூரில் உள்ள ஒரு மொபைல் கடையில் குறைந்த விலையில் மொபைல் போன் கிடைப்பதாக அறிந்த சுரேஷ்குமார், அந்த கடையில் செல்போன் ஆர்டர் போட்டுள்ளார். கொரியர் சர்வீசில் அனுப்பி வைத்தால், மொபைல் போன் சுரேஷ்குமாருக்கு கிடைக்க மூன்று தினங்கள் ஆகும் என்பதால் கடை உரிமையாளர் கோவை அரசு போக்குவரத்து கழக பேருந்து எண்-TN 39 N 0398 என்ற பேருந்தில் நடத்துனர் சரவணகுமார் என்பவரிடம் செல்போனை பார்சல் செய்து கொடுத்துள்ளார்.
கடையின் உரிமையாளர் நடத்துனர் சரவணகுமாரிடம் ரூ.200 கொடுத்துவிட்டு மீதி 200 ரூபாயை நெல்லையில் இதனை பெற்றுகொள்ளும் சுரேஷ்குமாரிடம் வாங்கிக் கொள்ளுமாறு சொல்லியதாக தெரிகிறது. இதனை சுரேஷ்குமாரிடம் செல்போன் மூலமாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். பேருந்து தாழையூத்து பகுதிக்கு வரும்போது சுரேஷ்குமார் பேருந்தை நிறுத்தி செல்போனை வாங்கி கொண்டு 200 ரூபாய் கொடுத்துள்ளார். அதற்கு நடத்துனர் 600 ரூபாய் தர வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சுரேஷ்குமார் ரூபாய் 200 பணம் கொடுத்தால் போதும் என கடை உரிமையாளர் செல்போனில் தகவல் சொன்னதாக தெரிவித்துள்ளார்.ஆனால், நடத்துனர் சரவணகுமார் 200 ரூபாய் வாங்க மறுத்து 600 ரூபாய் கேட்டு நிர்பந்தம் செய்துள்ளார். இந்த நிலையில், பேருந்தில் இருந்து ஓட்டுனர் இறங்கி வந்து சுரேஷ்குமாரிடம் இருந்த செல்போனை பறித்து சென்று வண்டியில் ஏறி விட்டார். இதனைப் பார்த்து அதிர்ந்த சுரேஷ்குமார் தனது இருசக்கர வாகனத்தை கொண்டு அந்தப் பேருந்தை வழிமறித்து நிறுத்தினார்.