தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்; ரேஷன் கடை ஊழியர் உள்பட 2 பேர் கைது! - 1000 கிலோ அரிசி கடத்தல்

திருநெல்வேலி: ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ரேசன் கடை ஊழியர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

rice smuggling
rice smuggling

By

Published : Oct 18, 2020, 7:41 PM IST

திருநெல்வேலி மாவட்ட டவுன் வழியாக இன்று(அக்.18) அதிகாலை வாகனத்தில் ஒரு கும்பல் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அரிசி கடத்திய அந்த வாகனம் டவுன் வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து திருநெல்வேலி நகர காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருகே செல்லும்போது சந்தேகத்திற்குரிய மினி லாரியை காவல்துறையினர் மடக்கி சோதனையிட்டபோது உள்ளே 120 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் அரசு முத்திரையுடன் வழங்கப்படும் சாக்கு மூட்டைகளில் அரிசி கொண்டு செல்லப்பட்டதால் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநரை விசாரித்த போது தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் டவுன் பகுதியை சேர்ந்த பேராட்சி செல்வம் என்பவர் தான் அரிசி மூட்டைகளை ஏற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டவுன் காவல்துறையினர் பேராட்சி செல்வத்தை பிடித்து விசாரித்தபோது, அவர் டவுன் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருவதும், தனது நண்பர் கணேசன் என்பவருடன் சேர்ந்து இன்று(அக்.18) அதிகாலை ஒரு டன் ரேஷன் அரிசியை கடையில் இருந்து கடத்தி கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் பேராட்சி செல்வம், கணேசன் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர். வழக்கமாக தனிநபர்கள் தான் ரேஷன் கடைகளில் ஊழியர்களின் துணையோடு அதிகளவில் அரிசியை விலைக்கு வாங்கி அண்டை மாநிலங்களுக்கு கடத்தி அதிகளவில் விற்பனை செய்வார்கள். ஆனால் ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே நேரடியாக கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைக்கு வைத்த நஞ்சு; தாயின் உயிரையும் பறித்த கொடூரம் - கணவன் கைது!

ABOUT THE AUTHOR

...view details