தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீட்சி பெறும் நெல்லை 'மரக்கடசல்' - உற்பத்தியாளர்களின் வேண்டுகோள் என்ன? - Tirunelveli Mara Kadasal

'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மரக்கடசல் பொருட்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு..

Etv Bharat
Etv Bharat

By

Published : May 28, 2023, 6:50 AM IST

மீட்சி பெறும் நெல்லை 'மரக்கடசல்'

திருநெல்வேலி: மத்தியில் ஆளும் பாஜக அரசு உள்ளூர் தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே, பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை (Make in India) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் போர் விமானங்கள், ராணுவ உபகரணங்கள் நமது நாட்டிலையே உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தவகையில் உள்ளுர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நோக்கத்துடன் தெற்கு ரயில்வே சார்பில் 'ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' என்ற திட்டம் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்யவும் காட்சிப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 728 ரயில் நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 785 விற்பனை நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் தற்போது வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள், ஜவுளி மற்றும் கைத்தறி, பாரம்பரிய ஆடைகள், விவசாயம் மூலம் விளைவிக்கப்பட்ட திணை வகைகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் அரை பதப்படுத்தப்பட்ட உணவுகள் இத்திட்டம் மூலம் சந்தைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்தாண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பத்தமடை பாய், பனை ஓலைப்பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதில் அம்பையின் அடையாளமாக திகழக்கூடிய மரக்கடசல் (சொப்பு சாமான்கள்) பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் இதற்கான டெபாசிட் தொகையை செலுத்தி அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் மரத்திலான பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளுக்கு மரத்திலான பம்பரம், தள்ளுவண்டி, ஹெலிகாப்டர் கிலுக்கு உள்பட ஏராளமான மரப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, ரயில் நிலையம் வரும் பயணிகள் ஆர்வமுடன் இந்த மரக்கடசல் பொருட்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக, மண்மனம் வீசும் பனை ஓலை பெட்டிக்குள் வைத்து இந்த மரக்கடசல் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாக உள்ளது.

இதுகுறித்து கடை நடத்திவரும் முருகேசன் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'நான் சுமார் 15 வருடங்களாக இந்த தொழிலில் செய்து வருகின்றேன். பெரும்பாலான பொருட்கள் எங்கள் கை வண்ணத்தில் தயாரிக்கப்பட்டவை, அம்பை நகர் பகுதியில் வைத்து தொழிலில் செய்து வருகிறோம், தற்போது கடையில் நடக்கும் வியாபாரத்தை விட இங்கு கூடுதலாகவே விற்பனை நடக்கிறது. மேலும், சென்னை போன்ற நகர்ப்புற பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் இப்பகுதியின் அடையாளமான மரத்திலான பொருட்கள் பற்றி தெரிகிறது. சமீபகாலமாக இத்தொழில் நலிவடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

எனவே, அரசு எங்களுக்கு மானியம் உள்பட உதவிகளை செய்ய வேண்டும் குறிப்பாக அம்பாசமுத்திரம் செப்பு சாமான்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்துள்ளோம் தற்போது வரை அது கிடைக்கவில்லை புவிசார் குறியீடு கிடைத்தால் உலக அளவில் எங்கள் தொழில் மேலும் மேம்படும் என்று தெரிவித்தார். எனவே, அரசு விரைவில் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், 'கடசல் பட்டறைக்கு இலவச மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், இத்தகைய நவீன வேலைபாடுகள் நிறைந்த இந்த மரவர்ண கடசல் பொருட்கள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு' அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'திருநெல்வேலி கோவில்பட்டி திருச்செந்தூர் அம்பாசமுத்திரம் தென்காசி ஆகிய ரயில் நீலையங்களில் இத்திட்டத்தின் கீழ் விற்பனை நிலைநயங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பொருட்கள் மக்களிடம் குறிப்பாக, குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும்' தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் ஐடி பார்க்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details