தமிழ்நாடு முழுவதுமுள்ள மக்கள் கரோனா நெருக்கடிக்கு மத்தியில்தான் தங்கள் நாள்களை நகர்த்திவருகின்றனர். இதில், கரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிற நோயாளிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் முக்கூடல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்ணிடம் பேச நேர்ந்தது. நீரிழிவு, தைராய்டு, ரத்த அழுத்தம் எனப் பல்வேறு நோய்களைத் தன்னகத்தே கொண்டு மருந்து மாத்திரைகளின் நம்பிக்கையில் வாழ்ந்துவரும் அப்பெண் பகிர்ந்துகொண்ட விஷயம் சற்றே திடுக்கிடவைத்தது.
தனது பெரும்பாலான மாத்திரைகளை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளும் அவர், கரோனா காலத்தில் மருத்துவமனைக்குச் செல்ல அச்சமாக இருக்கிறது என்றார். அது மட்டுமில்லாமல், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளை நடத்தும்விதம் அச்சுறுத்தும்விதமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இவரைப் போன்ற ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் அச்சத்தினை களையவும், அரசு மருத்துவமனைகளின் உண்மை நிலையினை அறியவும் திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துமனையில் கள ஆய்வுமேற்கொண்டோம்.
இதன்படி, நெல்லையில் ஆகஸ்ட் 26 மாலை நிலவரப்படி 8770 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7319 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை, இம்மாவட்டத்தில் 158 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைதான் பிரதான கரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டுவருகிறது. இருப்பினும், பிற அரசு கல்லூரிகள், அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளின் விவரம்
பாளையங்கோட்டையில் அரசு தலைமை மருத்துவமனை, அரசு சித்த மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டிலும், கூடங்குளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் உள்பட நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நெல்லை அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 பேர் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால்தான் பிற நோயாளிகளுக்கு கவனம்கொடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
நெல்லை அரசு தலைமை மருத்துவமனை
இந்த மருத்துவமனையைப் பெரும்பாலானோர் ‘ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரி’ என்றுதான் அடையாளப்படுத்துவார்கள். ஏழை மக்களின் பங்காளனாகச் செயல்பட்டுவரும் இம்மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லை என மத்திய அரசின் உதவியுடன் ரூ.150 கோடி ரூபாய் மதிப்பில், புதியதாக பல்நோக்கு உயர்தர சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டது. இது 2019ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.
மொத்தம் எட்டு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்நோக்கு மருத்துவமனையில் பல்வேறு முக்கியச் சிகிச்சைகளுக்கான நவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பழைய மருத்துவமனையில் பிற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு முழுக்க முழுக்க கரோனோ சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைகள் உள்பட அனைத்து சிகிச்சைகளும் புதிய பல்நோக்கு உயர்தர சிறப்பு மருத்துவமனையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் நாளொன்றுக்கு சராசரியாக 1,500 முதல் 2,000 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இது தவிர இதய நோய் பிரிவு, சிறுநீரக நோய் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளில் சுமார் ஆயிரம் நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இவர்களிடம் தற்போதைய சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பும்போது, பெரும்பாலான நோயாளிகள் தங்களுக்கு சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுவதாகவே தெரிவித்தனர். மருத்துவர்களும், பயிற்சி மருத்துவர்களும் நாள்தோறும் உரிய நேரத்தில் தங்களை கவனித்து தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவதாக உறுதியாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் கேட்கும்போது, உணவு வழங்குவதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்தனர். இந்தக் காலக்கட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொண்டுவருகிறது.
நாள்தோறும் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவும், பால், பழம், முட்டை ஆகியவை இடையிடையே வழங்கப்படுகின்றன. இந்த உணவுகள் சில நேரங்களில் சரியான நேரத்திற்கு நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை எனவும், இது குறித்து நோயாளிகள் சிலர் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் கள ஆய்வின்போது அறிய முடிகிறது.
மருத்துவர்கள் முறையாகத் தங்களை கவனிப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இங்கு சிகிச்சைப் பெற்றுவரும் இசக்கித்துரையிடம் கேட்கையில், “ஒரு வாரமாக சிகிச்சைப் பெற்றுவருகிறேன். மருத்துவர்களைப் பற்றி தவறான கண்ணோட்டம் சிலரிடம் இருக்கிறது. இந்தக் கரோனோ காலத்திலும் மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் வேலை செய்கிறார்கள்” என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி இசக்கிமுத்து மட்டுமல்ல, அங்கு தங்கி சிகிச்சைப் பெற்றுவரும் மற்றும் சிலரும்கூட இதே கருத்தைத்தான் முன்வைக்கின்றனர். தனது மகள் ஸ்டாப்ளர் பின்னை விழுங்கிவிட்டதால் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு வந்த சாந்தி, தற்போது தனது மகளின் நலனுக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைதான் காரணம் என்கிறார்.
”கரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று கூற முடியாது. கரோனோ நோயாளிகளால் பிறருக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களைத் தனியாக பழைய மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். இங்கு பிற நோயாளிகளுக்கு வழக்கம்போல் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கிறார்கள்” என்கிறார் சாந்தி.
நெல்லை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை பெரும்பாலான நோயாளிகள் இதே கருத்தைத்தான் தெரிவிக்கின்றனர். தற்போது இங்கு அளிக்கப்படும் சிகிச்சை பிற நோயாளிகளுக்கு மீண்டுவரும் நம்பிக்கையளிப்பது நிதர்சனமான உண்மை. பொதுமக்கள் செவி வழிக்கதையாகக் கேட்பதை நம்பாமல் தீர விசாரித்து அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுதலே நலம்.
மக்களின் கோரிக்கை
சிகிச்சையில் எவ்வித சிக்கலும் இல்லை, உணவுதான் அவ்வப்போது சிக்கலாகிவிடுகிறது எனத் தெரிவிக்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் கோரிக்கையை ஆராய்ந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.
கரோனாவைக் காரணம் காட்டி பிற நோயாளிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறதா? எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சிகிச்சை அளிப்பதை இனியும் தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:'தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் எவ்வித வசதிக் குறைபாடும் இல்லை'