விஜய்யை குறிப்பிட்டு அரசியல் வசனங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் திருநெல்வேலி:தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டுக் கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாள் "கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்தது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் தமிழ்நாட்டில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்குச் சட்டமன்றத் தொகுதி வாரியாக “கல்வி விருது” வழங்கும் விழா நடத்தினார். இவ்விழாவில் நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் காமராஜரைப் பற்றியும் அம்பேத்கரை பற்றியும் பெரியாரைப் பற்றியும் படியுங்கள் எனக் கூறினார்.
இந்த நிலையில் ஏற்கனவே அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் விஜய் ஜூலை 11ஆம் தேதி பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்தார். மாணவ, மாணவிகளின் பாராட்டு விழாவைச் சிறப்பாக நடத்தியதற்காகப் பாராட்டும், நிர்வாகிகளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும், நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளும் வழங்கினார். அதில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு நேரப் பாடசாலை ஆரம்பிக்க நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.
தற்போது நாளை காமராஜர் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாளை முதல் இரவு நேரப் பாடசாலை உள்ளிட்டவைகளையும் திறக்க நடிகர் விஜய் ஏற்பாடு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அடிப்படை பணிகளைத் தொடங்கி இருப்பதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். இந்த இரவு நேரப் பாடசாலைக்கு 'தளபதி விஜய் பயிலகம்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளைய தினம் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவை ஒட்டி நெல்லை மாநகர் பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் பாளையங்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அதிர வைக்கும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் ‘கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் வழியில் நாளைய தலைமுறையை வழிநடத்தும் நாளைய முதல்வரே’ என குறிப்பிட்டு சட்டமன்ற முகப்பு படத்துடன் கூடிய போஸ்டருடன் நடிகர் விஜயை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் மந்திரவாதி கத்தியால் குத்தி கொலை.. நடந்தது என்ன?