நெல்லை:முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்த கலியன் - சிதம்பரவடிவு தம்பதியின் மகன் மகேஷ் (27) நாகர்கோவிலை சேர்ந்த ஏஜெண்டுகள் மூலம் தனது மகன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் கூறிய வேலையை கொடுக்காமல் மோசடி கும்பலிடம் தனது மகனை சிக்க வைத்ததாகவும் அவரது தாயார் சிதம்பரவடிவு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். தற்போது தனது மகனை நாட்டிற்கு அழைத்து வர பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில், ”நாகர்கோவிலைச் சேர்ந்த ஆண்ட்ரூ, அந்தோணி, சிவக்குமார் ஆகியோர் 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு எனது மகனை டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்காக கடந்த மாதம் 7ம் தேதி கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் எனது மகனை வேலை செய்யும்படி கூறியுள்ளனர்.
அந்த வேலையைப் பார்க்க விருப்பம் இல்லாமல் எனது மகன் சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்தும் அவனை அனுப்பாமல் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். இது குறித்து ஏஜெண்டுகளிடம் விசாரித்த போது இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் உனது வீட்டில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பணம் வாங்கிக் கொடு என்று கேட்டனர்.
அதன் பேரில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எனது கணவரின் வங்கி கணக்கு மூலம் ஆண்ட்ரூ அந்தோணிக்கு அனுப்பினோம். ஆனாலும் இதுவரை எனது மகனை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், ”2 லட்சம் ரூபாய் பணம் தந்தால் தான் நீ ஊருக்கு செல்ல முடியும்...!” என்று என் மகனின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை சட்ட விரோதமாக பறித்து வைத்துள்ளனர். எனவே எனது மகனை பத்திரமாக மீட்டு தரவும் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டி வரும் ஆண்ட்ரூ அந்தோணி மற்றும் சிவக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என மனுவில் சிதம்பர வடிவு கூறியுள்ளார்.