திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள், வயது 63. இவர் திருநெல்வேலியில் உள்ள அவரது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மூன்று நாள்களுக்கு முன்னர் (ஜன.3) மகள் வீடு உள்ள என்ஜிஓ காலனி மர்பி நகர் பகுதியில் இருந்து ஜெபா கார்டன் நான்கு சாலை சந்திப்பு பகுதிக்கு தோசை மாவு வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார்.
மூதாட்டி நடந்து வருவதை கவனித்த இரு நபர்கள் அவரிடம் நகைகளை கொள்ளையடிக்கை திட்டமிட்டுள்ளனர். ஒருவன் இருசக்கர வாகனத்தில் அருகில் நின்று கொள்ள, மற்றொருவன் மூதாட்டி அருகில் சென்று காவல்துறை ஆய்வாளர் உங்களை அழைக்கிறார் எனக் கூறி அழைத்து வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தின் அருகில் நின்ற நபர் செயின், வளையல் போன்ற தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியே வரக்கூடாது, பாதுகாப்பாக இருக்காது என அறிவுரை கூறுவது போல நடித்து நகைகளை கழற்றி பேப்பரில் வைத்து பையில் வைத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள்
அவன் கூறியதை நம்பி மூதாட்டி நகையை கழற்றி தான் கொண்டுவந்த பைக்குள் வைத்துள்ளார். கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி, கையில் அணிந்திருந்த வளையல் ஆகியவற்றை கழற்றி பைக்குள் வைத்த நிலையில், மூதாட்டியின் கவனத்தை திருப்பி, பேப்பரில் மடித்து வைத்திருந்த நகை பொட்டலத்தை திருடியுள்ளனர். மேலும், மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மலையும் கழட்ட கூறிய நிலையில் அவர் மறுத்து, அங்கிருந்து செல்வதாக கூறியுள்ளார்.
14 சவரன் நகைகளை நூதனமாக திருடிய நபர்கள் மூதாட்டியின் கண்முன்னே இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அருகில் இருந்த கடைக்கு சென்ற பிறகு மடித்து வைத்திருந்த பொட்டலத்தில் இருப்பது தங்க நகை அல்ல கல் என்பது மூதாட்டிக்கு தெரியவந்துள்ளது.