திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது குடும்பத்தினர் பெண்கள், குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்போது திடீரென கணேசன் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கவனித்த காவல் துறை அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் கணேசனிடம் விசாரித்தபோது, “விக்கிரமசிங்கபுரம் பகுதியில் எனது தந்தை சுப்பிரமணியம் பெயரில் நான்கு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984ஆம் ஆண்டு காளத்தியா பிள்ளை என்பவருக்கு கிரையம் கொடுத்துள்ளார். மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் நாங்கள் கல்லறை தோட்டம் ஆகவும் விவசாயத்திற்கும் பராமரித்து வருகிறோம். நிலத்தில் 1967 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை நிலத்தின் உரிமையாளரான எனது தந்தை உள்பட 7 பேர் சமாதி உள்ளது.
மாதம்தோறும் சமாதியில் வழிபட்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண காந்த தேவர் குடும்பத்தைச் சேர்ந்த சிவராஜ் பாண்டியன், இந்த நிலத்தை ஆக்கிரமித்து மரங்களை வெட்டுவது, அத்துமீறி கல்லறையை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்கள். தட்டி கேட்டபோது சாதி ரீதியாக எங்களை தரக்குறைவாகப் பேசினார்கள். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நீதிமன்றம் செல்லும்படி அறிவுரை வழங்கினார்.