நெல்லை:பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, வடமலைசமுத்திரம் என்ற கிராமம். கால்நடை விவசாயிகளை அதிகம் கொண்ட இந்த குக்கிராமத்தை இளைஞர் ஒருவர் தனி ஒருவனாக இருந்து உலகறிய செய்து வருகிறார்.
திவாகரன் எனும் இந்த கிராமத்து இளைஞர் அருகில் சிறு வயது முதலே கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட திவாகரன், தனது இளமைப்பருவத்தில் கபடிப்போட்டியில் தேசிய அளவில் சாதிக்க திறமை இருந்தும் அதற்கான உரிய வழிகாட்டுதல் மற்றும் பண உதவி இல்லாததால் அவரது கனவு நிறைவேறவில்லை. இருப்பினும் தன்னால் முடியாததை தனது கிராமத்து இளைஞர்களை வைத்து சாதித்துக்காட்ட வேண்டும் என்று திவாகரன் எண்ணியுள்ளார்.
குறிப்பாக, கிராமங்களில் இன்றளவும் குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்படும் பெண்களை கபடிப்போட்டியில் சாதிக்க வைக்க வேண்டும் என்று துடித்துள்ளார். இதற்காக பாரதி ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் அகாடமியைத் தொடங்கினார்.
'எங்க கபடி மாஸ்டர் எங்களுக்கு அப்பா மாதிரி...!' - நெகிழ்ச்சியடையும் கபடி வீரர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக திவாகரன் தனது கிராமத்தைச்சேர்ந்த பெண்களுகளுக்கு இலவசமாக கபடிப்பயிற்சி அளித்து வருகிறார். வடமலைசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச்சேர்ந்த சுமார் 40 பெண்கள் இவரிடம் நாள்தோறும் கபடிப்பயிற்சி பெற்று வருகின்றனர். அதேபோல் ’வீரத் தமிழன் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற பெயரில் மூத்த பயிற்சியாளர் கிறிஸ்டோபருடன் இணைந்து ஆண்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறார்.
இதற்காக தனது கிராமத்திலேயே அமைக்கப்பட்டுள்ள மிக எளிய மைதானத்தில் காலை மற்றும் மாலை இரு வேளைகளில் பயிற்சி அளிக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற பெண்கள் 100க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட மாநிலப்போட்டிகள் மற்றும் நான்கு தேசிய போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட கோப்பைகளை அள்ளிக்குவித்துள்ளனர். திவாகரன், வீட்டில் எங்கு பார்த்தாலும் கோப்பைகளாக நிறைந்து கிடக்கும் காட்சிகளே இதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக உள்ளது. பள்ளிகளில் மற்றும் அரசு துறைகளில் உள்ள அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் சாதிக்க முடியாததை திவாகரன் தனி ஆளாக சாதித்துக் காட்டியுள்ளார்.
அது எப்படி சாத்தியமாகிறது...? என்று விசாரித்தபோது, தமது மாணவர்கள் செல்போன், டிவி போன்ற விஷயங்களுக்கு அடிமை ஆகாமல் முழு நேரமும் கல்வி மற்றும் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதாக திவாகரன் தெரிவிக்கிறார். நாள்தோறும் அதிகாலை எழுந்தவுடன் மாணவர்கள் பாதாம் பருப்பு, பயிறு வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு நேராக, திவாகரனைத் தேடி மைதானத்திற்கு வந்து விடுகின்றனர்.
அங்கு அவர்களுக்கு அடிப்படை பயிற்சியான ஓடுதல், கயிறு ஏறுதல், பளு தூக்குதல் போன்றப் பயிற்சிகளை அளிக்கிறார். தொடர்ந்து கபடி விளையாட்டில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொடுக்கிறார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவி ஒருவர் இந்திய அரசின் கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்றிருப்பது மேலும் சிறப்பாகும்.
இதுகுறித்து பயிற்சியாளர் திவாகரன் நம்மிடம் கூறும்போது, 'எனது மாணவர்கள் பல்வேறு தேசியப்போட்டிகள் மற்றும் மாநிலப்போட்டிகளில் சாதனைப் படைத்துள்ளனர். செல்போன் பார்க்காமல் விளையாட்டை மட்டுமே பொழுதுபோக்காக வைத்துள்ளதால், அவர்களால் கபடியில் ஜொலிக்க முடிகிறது. எனது ஊர் ஒரு கிராமம். நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து கபடி விளையாட்டை மட்டும் தான் பார்த்தேன்.
கபடியை காதலித்தேன்.., கபடி விளையாட்டில் திறமை இருந்தும் சிறந்த பயிற்சியாளர் கிடைக்காததால் என்னால் சாதிக்க முடியவில்லை. பயிற்சி கொடுப்பது மட்டுமே சிறந்த பயிற்சியாளர் அல்ல; தனது மாணவரை வாழ்க்கையில் முன்னேறச்செய்வதும் ஒரு பயிற்சியாளரின் கடமை. எனவே, என்னால் சாதிக்க முடியாததை எனது மாணவர்களை வைத்து சாதித்துக்காட்டுகிறேன்.
மாணவர்களுக்குத்தேவையான அனைத்து பயிற்சிகள், உணவு மற்றும் செலவுகளை பார்த்துக்கொள்கிறோம் இதற்காக மூத்த பயிற்சியாளர்கள் மாரி முருகேசன் போன்ற பலர் எனக்கு உதவுகின்றனர். இதுவரை நான்கு தேசியப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளோம். எனது பயிற்சிக்கு பலர் பண உதவி தர முன்வந்தும் கடைசி நேரத்தில் அவர்கள் பின் வாங்குவதால் மனம் தளர்ந்து நிற்கும்போது எனது மாணவர்கள் எனக்கு ஆறுதல் கூறுவார்கள்.
இதனால் அதிக பண இழப்பைச்சந்தித்துள்ளேன். ஒரு நேரத்தில் எனது அம்மா, குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல் என்னை விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு மூத்த பயிற்சியாளர்களின் உதவியால் கடனில் இருந்து மீண்டேன். இது கிராமம் என்பதால் பெண்கள் முதலில் விளையாட வரும்போது அனைவரும் ஏளனம் செய்தார்கள். ஷூவை கழுத்தில் தொங்க விட்டுச்செல்லுங்கள். பெண்களுக்கு எதுக்கு விளையாட்டு என்று பேசினார்கள்.
ஆனால், நான் பயிற்சி அளித்த ஒரு ஆண்டில் ஒரு மாணவி தேசிய போட்டியான கேலோ இந்தியாவில் பங்கேற்றார். அதன் பிறகு எனக்கும் எனது மாணவர்களுக்கும் கிராமத்தில் மரியாதை ஏற்பட்டது. எனது பயிற்சி மூலம் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். இதனால் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். தமிழ் கலாசாரத்தை விளையாட்டால் மட்டும் தான் பாதுகாக்க முடியும். எதிர்காலத்தில் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவது தான் எனது லட்சியம். அரசும் அதற்கு உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து திவாகரனிடம் பயிற்சி பெறும் மாணவன் நவீன் கூறும் போது, ”எங்களுக்கு தினமும் மிகக் கடுமையான பயிற்சி அளிப்பார்கள். நாங்கள் செல்போன், டிவி பார்ப்பதில்லை. பெண்களை மதிக்க வேண்டும், ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என ஒழுக்கத்தையும் எங்கள் பயிற்சியாளர் கற்றுக்கொடுக்கிறார். எதிர்காலத்தில் நான் ஒரு இந்திய வீரராக தேர்வாக வேண்டும் என்பது எனது லட்சியம்” என்றார்.
மாணவர் ஸ்ரீயாஸ் கூறும் போது, ”எங்கள் பயிற்சியாளர் எங்களுக்காக அவரது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். கல்வியைத்தவிர, கபடி மட்டும் தான் எங்களுக்கு முக்கியம் கபடிக்காக எதையும் தியாகம் செய்வோம். எதிர்காலத்தில் விவோ ப்ரோ கபடி வீரராக வரவேண்டும் அல்லது விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலைபெற்று அதன் மூலம் கபடி விளையாட்டிற்கு உதவ வேண்டும்” எனத்தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவி ரிஷி கூறும் போது, “நாங்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவோம். யோகா செய்துவிட்டு நேராக மைதானத்திற்கு வருவோம். அங்கு எங்களுக்கு மிக கடுமையான பயிற்சி கொடுக்கப்படும். சத்தான உணவு சாப்பிடுகிறோம். செல்போன், டிவி பார்ப்பதில்லை. பயிற்சியாளர் மிகவும் ஒழுக்கமாக எங்களை நடத்துகிறார்” என்றார்.
மாணவி அருள்செல்வி கூறுகையில், “அதிகப்போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அதிக தோல்வியையும் சந்தித்துள்ளோம். அதிக வலியும் ஏற்பட்டுள்ளது. ஆனால், தடைகளைத் தாண்டி பல சாதனைகளை படைத்துள்ளோம். எங்கள் சார்(பயிற்சியாளர்)எங்களுக்கு அப்பா மாதிரி. அம்மா, அப்பா இடத்திலிருந்து எங்களுக்கு துணையாக இருக்கிறார்” என்று பெருமையோடு தெரிவித்தனர்.
தனக்குள் இருக்கும் திறமையைப் பயன்படுத்தி தன்னைப் புகழ்படுத்தி அதன் மூலம் வருமான ஈட்ட நினைக்கும் பல பயிற்சியாளர்களுக்கு மத்தியில் கிராமத்துப் பெண்களை கபடிப் போட்டியில் சாதிக்க வைக்கும் இளைஞர் திவாகரனின் செயல் பாராட்டுக்குரியதே.
இதையும் படிங்க: பெரிய பதவியை எதிர்பார்க்கிறார் ஆளுநர் ரவி... பதவி விலகி விட்டு கருத்து சொல்லட்டும்... மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி...