மகளை கடத்திய பெற்றோர் மீது வழக்கு திருநெல்வேலி: கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரங்கநாராயணபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், முருகன் (24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுமிகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின் ஜனவரி 25ஆம் தேதி தங்கள் காதல் திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சுமிகாவின் தாயார் பத்மா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது மகளைக் காணவில்லை என ஆட்கொணர்வு மனு அளித்தார். இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி கூடங்குளம் காவல் துறையினர், சுமிகாவை மீட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர்படுத்தினர்.
அங்கு நீதிபதியின் முன்பு சுமிகா, தான் திருமணம் செய்த கணவர் முருகனுடன் செல்வதாக தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சுனிகாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நேற்று (பிப்.16) அவர்கள் தங்களது சொந்த ஊரான ஸ்ரீரங்க நாராயணபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது சுமிகாவின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 12 பேர் முருகன் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி, சுமிகாவை இழுத்துச்சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக சுமிகாவின் கணவர் முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுமிகாவின் தந்தை முருகேசன், அவரது தாயார் பத்மா, உறவினர்கள் தங்க முத்து, அமுதா, அனுசியா, விஜயகுமார், செல்வகுமார், பாப்பா, தங்கம்மாள், வைகுண்ட மணி, பஞ்சு பழம் உள்ளிட்ட 12 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.
சுமிகாவை அவர்கள் மீட்டு தலைமறைவாக வைத்துள்ளனர். சுமிகாவை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி கணவர் வீட்டில் இருந்த சுமிகாவை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்தவர் போக்சோவில் கைது!