திருநெல்வேலி:வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஓய்ந்திருந்த மழை நேற்று முன்தினம் முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று மாலையும் திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இன்றும் காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் அணைப்பகுதியில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 5400 கன அடி, காட்டாறாற்று வெள்ளம் 1500 கன அடி என மொத்தமாக தாமிரபரணி ஆற்றில் 7000 கன அடி தண்ணீர் செல்வதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.