திருநெல்வேலியில் நவ. 18ஆம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக பாளையங்கோட்டை, மனகாவளம்பிள்ளைநகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர ரெட்டி, நெல்லை ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்வது குறித்த விரிவான ஆலோசனைக் கூட்டம் பனீந்தர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை ஆட்சியர் விஷ்ணு, தென்காசி ஆட்சியர் சமீரான், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பனீந்தர ரெட்டி, "நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் பேர் தங்கும் வகையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன.
பெரிய அளவிலான பாதிப்புகளைத் தவிர்க்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் காத்திருக்கின்றனர். பெரிய அளவிலான புயல் எச்சரிக்கை கொடுக்கப்படும் போது முன்பு 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மட்டுமே தகவல் அளிக்க முடியும். ஆனால் தற்போது 200 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க:'அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' - முதலமைச்சர் பழனிசாமி