நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த வரை உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் இளைஞர்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக 224 பதவிகளுக்கு இன்று (அக்.22) நடைபெற்ற மறைமுகத் தேர்தலிலும் சில இளைஞர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் குறிப்பாக நெல்லை மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 வயது பெண் ஒருவர் யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
22 வயதில் ஒன்றியக்குழு தலைவர்
மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 25 வார்டுகள் உள்ளன. இவற்றில் 19ஆவது வார்டில் மானூர் திமுக நிர்வாகி அன்பழகன் என்பவரது மகள் ஸ்ரீலேகா (22) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரைத் தொடர்ந்து இன்று (அக்.22) மானூர் ஊராட்சி ஒன்றியக் குழு (யூனியன்) தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஸ்ரீலேகா மட்டுமே ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
போட்டியின்றித் தேர்வு
இதையடுத்து ஒன்றிய குழுத் தலைவராக ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்தார்.
இதன்மூலம் தமிழ்நாட்டின் மிகக் குறைந்த வயதில் யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஸ்ரீலேகா பெற்றுள்ளார். இந்நிலையில், அவருக்கு ஊர் பொதுமக்களும் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:கீழடி கண்டுபிடிப்புகளை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ளும் திட்டம்: தொடங்கி வைத்த முதலமைச்சர்