திருநெல்வெலி:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு அணுமின் நிலையத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்த பொழுது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது 349 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் கூடங்குளம், உவரி, பழவூர், வள்ளியூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் அரசு ஆணையின்படி 295 வழக்குகள் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டன. சில வழக்குகள் காவல்துறை விசாரணையில் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும், எஞ்சியுள்ள 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு கட்டமாக நெல்லை மாவட்டம், வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் இடிந்த கரையைச் சார்ந்த பிரைட்டன் மற்றும் இளங்கோ ஆகியோர் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டத்தின் பொழுது"தெறிப்பு"எனப்படும் தங்களது வருமானத்தின் பத்தில் ஒரு பகுதியை கொடுப்பதற்கு, மறுத்ததாகவும் அதன் பேரில் சு.ப.உதயகுமார், புஷ்பராயன் மற்றும் ஜேசு ராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு இடிந்தகரையைச் சார்ந்த ஜோதி, ரோசாரி, லூர்து மைக்கேல் உள்ளிட்ட 19 பேர் கொண்ட கும்பல் கொடிய ஆயுதங்களால் தாக்கியதாக கொடுத்தப் புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இதில் சு.ப.உதயகுமார், புஷ்பராயன், ஜேசு ராஜன் உள்ளிட்ட 22 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று நேற்று சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷித் பேகம் தீர்ப்பு வழங்கினார்.