தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் ஏற்பட்ட ஆரம்ப கால கட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே கரோனாவின் பாதிப்பு இருந்தது. குறிப்பாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் 100-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே மே 4ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திற்கு வரத்தொடங்கினர். இதில் பெரும்பாலானோருக்கு இங்கு வந்த பிறகு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இங்கு பாதிப்பு எண்ணிக்கையானது மளமளவென உயரத் தொடங்கியது.
அதன்படி ஜூன் மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கை 500-யைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து நாள்தோறும் 20 முதல் 25 பேர் வரை, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி 40 பேர் முதல் 50 பேர் என தினமும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, ஒரே நாளில் அதிகபட்சம் 96 நபர்கள் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தனர். பின், அடுத்தடுத்து 90 பேர், 80 பேர் எனத் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் தான் இன்று(ஜூலை 9) ஒரே நாளில் இம்மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 139 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.