திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் வானமாமலை (50). இவர் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலை, நாங்குநேரி நீதிமன்றம் அருகே கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும், ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் கடையைத் திறந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், இவரது கடை மீது மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார். அதில், இரண்டு குண்டுகள் பலத்த சத்தத்தோடு வெடித்துள்ளது. இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். அப்போது அந்த நபரும் தப்பி ஓடியுள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து உடனடியாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தீவிர விசாரணை நடத்தினார். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் தான் வானமாமலை கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசினார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அம்மாணவரிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். செய்தியாளர் நடத்தி வரும் கடை மீது வெடிகுண்டு வீசியது ஏன் என விசாரித்த போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாங்குநேரி பகுதியில் குறிப்பிட்ட இரு சமூகத்தைச் சேர்ந்த நபர்களிடையே அடிக்கடி சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவன் ஒருவரை, சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர், தடுக்க சென்ற மாணவனின் தங்கையையும் வெட்டினர். சாதி பிரச்சினையால் நடைபெற்ற இந்த சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செய்தியாளர் வானமாமலை பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவன் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். குற்றம் சுமத்தப்பட்ட மாணவனும், வானமாமலையும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே ஒரே சமூகமாக இருந்து கொண்டு தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு எப்படி ஆதரவு கொடுக்கலாம் என்ற ஆத்திரத்தில், வானமாமலை கடை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பு, வானமாமலை பணியாற்றி வந்த தனியார் தினசரி நாளிதழில் வெடிகுண்டு வீசிய மாணவன் பற்றிய ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியையும் வானமாமலை தான் தனக்கு எதிராக கொடுத்தார் என, ஆத்திரமடைந்து கடை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு பின், வானமாமலைக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர் வானமாலையை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது, “வெடிகுண்டு வீசிய மாணவனுக்கும் எனக்கும் நேரடியாக எந்த முன் விரோதமும் இல்லை. இதன் பின்னணியில் வேறு நபர்கள் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பள்ளி மாணவனுக்கு அரிவாளால் வெட்டிய சம்பவத்திலிருந்து சிலர் என் மீது விரோதத்தில் இருக்கின்றனர்.
நான் ஏற்கனவே பணியாற்றிய நாளிதழிகளில் இன்று வெடிகுண்டு வீசிய மாணவன் குறித்து செய்தி ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை நான் கொடுத்ததாக தவறாக நினைத்து மாணவன் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்” என கூறினார். பள்ளி மாணவனை, சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவத்தை தொடர்ந்து நாங்குநேரியில் சாதிய மோதல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இருப்பினும் சாதி மோதல்கள் முடிவுக்கு வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. முன்விரோதம் காரணமாக தொலைக்காட்சி செய்தியாளர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க:காதலர்களை மிரட்டி ஜிபே மூலம் பணம் பறித்த கும்பல்..! வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம்!