திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே போலீசாரின் வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள 127 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா போதைப்பொருளை, விற்பனைக்கு கொண்டு சென்ற நாம் தமிழர் இயக்க இராதாபுரம் தொகுதி நிர்வாகி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே சாத்தான்குளம் செல்லும் சாலையில், திசையன்விளை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை சோதனை இட்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை மூட்டைகளாக கட்டி கொண்டு சென்றது தெரிய வந்தது.
விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் ராதாபுரம் தொகுதி துணைச் செயலாளர் திசையன்விளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான சேகர், மாரி ராமன், தூத்துக்குடி மாவட்டம் சவேரியார் புரத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகிய நான்கு பேரும் குட்காவை, பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்கள் நால்வரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 127 கிலோ குட்காவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடைக்கு மேடை தமிழகத்தில் கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார். குறிப்பாக போலீசார் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆதரவோடு தான் கஞ்சா, குட்கா போன்றவை தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதுபோன்ற சூழலில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் மூட்டை மூட்டையாக குட்கா கொண்டு சென்றபோது கைதான சம்பவம் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.