தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல் பிடுங்கிய பிரச்சனையில் சிக்கியோருக்கு மீண்டும் பணி.. 3 ஆய்வாளர்களுக்கு பொறுப்பு.. - Tirunelveli news

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பல் பிடுங்கிய வழக்கு தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கி நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பல் பிடுங்கிய விவகாரத்தில் நடவடிக்கை பாய்ந்த காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பொறுப்பு
பல் பிடுங்கிய விவகாரத்தில் நடவடிக்கை பாய்ந்த காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பொறுப்பு

By

Published : May 27, 2023, 5:49 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 10 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் உள்ளிட்டோருக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ராஜகுமாரிக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளராகவும், பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட உளவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்து பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கோமதி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய வழக்கு தொடர்பாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணியிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மீது சிபிசிஐடி காவல் துறையினர் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதன் மூலம், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி உள்பட காவலர்கள் அனைவரையும் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். அதிலும் குறிப்பாக, சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்திருந்தார்.

இது போன்ற நிலையில், பல் பிடுங்கிய விவகாரத்தில் சிக்கிய காவல் ஆய்வாளர்கள் மீது பெயர் அளவுக்கு நடவடிக்கை எடுத்து விட்டு, தற்போது மீண்டும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் மூன்று வழக்குகள் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், விசாரணை நடைபெற்று வரும் நிலையில் துறை சார் நடவடிக்கைகள் மூலம் தண்டிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், நெல்லை மாவட்ட எஸ்பியாக இருந்த சரவணனும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கைதிகள் பல் பிடுங்கிய விவகாரம்: போலீசார் கூண்டோடு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details