தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களம் காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்ற இளைஞர், அருகே உள்ள சிந்துவம்பட்டி பகுதிக்குச் சென்ற போது, அதே சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டடுள்ளது.
இதனையடுத்து இருளப்பனை, சிந்தும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயாம் அடைந்த இருளப்பனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இருளப்பனின் உறவினர்கள், பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் அறிந்து அங்கு வந்த பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கீதா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.