தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களம் காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது காந்திநகர் பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்ற இளைஞர், அருகே உள்ள சிந்துவம்பட்டி பகுதிக்குச் சென்றபோது, அதே சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருளப்பனை, சிந்தும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயாம் அடைந்த இருளப்பனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்யக் கோரி இருளப்பனின் உறவினர்கள், பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் அறிந்து அங்கு வந்த பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கீதா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும், தொடர்ந்து 4 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பெரியகுளம் பகுதியில் இருந்து ஆண்டிபட்டி, குள்ளபுரம், தேவதானப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.