தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 17 வயது பள்ளி மாணவி ஒருவர், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், மாலை சரியான நேரத்தில் மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியை, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி உள்ளனர். பின்னர் எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், காணாமல் போன பள்ளி மாணவியை கடந்த 8 நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 17 வயது பள்ளி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பது காவல் துறையினரின் ரகசிய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இளைஞர் மற்றும் பள்ளி மாணவி ஆகிய இருவரையும் காவல் துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, இளைஞர் மற்றும் 17 வயது பள்ளி மாணவி இருவரும் காதலித்து திருமணம் முடித்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், பள்ளி மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடையாததால், அந்த மாணவியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அந்த இளைஞரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நீதிபதி அளித்த உத்தரவின் பேரில், அந்த இளைஞர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவி அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்; பெங்களூர் விரைந்த தனிப்படை போலீசார்