தேனி மாவட்டம் கம்பத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நள்ளிரவு காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள பத்தரகாளியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. அதேபோல், கம்பத்தில் குமுளி மெயின் ரோட்டில் உள்ள கண்ணாடி கடை, மளிகைக்கடை, எலக்ட்ரிக்கல் கடை, ஜவுளிக்கடை என நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றிருந்தது. இதில் கண்ணாடி கடையில் மட்டும் கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் 5 ஆயிரம் ரூபாய் திருடுபோனது.
இதுதொடர்பாக கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியினை அடிப்படையாக கொண்டு ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். இதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கம்பம் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் மகன் ஹரீஸ்குமார்(19) எனத் தெரியவந்தது.
இதையடுத்து நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திருந்த ஹரீஸ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில் உண்டியல்,கண்ணாடிக்கடையில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த கம்பம் வடக்கு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.