தேனி:கம்பம் பகுதிக்குள் புகுந்த அரிசி கொம்பன் யானை அட்டூலியம் செய்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை விரட்டியது. இந்நிலையில் யானையை விரட்டும் முயற்சியில் தமிழ்நாடு - கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை விரட்டியது. பின்னர் வனத்துறையினர், காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர். இதனால், கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரி கொம்பன் அருகில் இருந்த காந்திநகர் காலனி அருகே உள்ள வாழை தோப்பில் புகுந்த அந்த பகுதியிலேயே தஞ்சம் அடைந்தது. தோப்பில் தஞ்சம் அடைந்த யானை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அருகே பறந்த ட்ரோன் கேமராவால் யானை அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றது.
இந்நிலையில் அனுமதி இன்றி ட்ரோன் இயக்கிய சின்னமனூரைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது கூடலூர் சாலை பகுதியில் அரி கொம்பன் உலா வருவதால் அந்த பகுதியில் யாரும் செல்லாமல் காவல் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். மேலும், யானையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.