தேனி மாவட்டம் போடி பகுதியைச் சார்ந்தவர் மணி. இவரது மனைவி சினேகா (வயது 20). இவர் பிரசவத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் கிராம சாவடி தெரு பகுதியில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதனை அடுத்து தனது தாயார் வீட்டில் சினேகா தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் சினேகாவின் தாய் தந்தையர் இருவரும் கேரளாவிற்கு வேலைக்குச் சென்று விட, வீட்டில் பாட்டியுடன் தனது குழந்தையை சினேகா கவனித்து வந்து உள்ளார். இந்நிலையில் சினேகாவின் பாட்டி வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்று உள்ளார்.
அப்போது சினேகா குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் குளித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தையை காணவில்லை எனக் கூறப்படுகிறது, குழந்தைக்கு மேல் போர்த்தி இருந்த துண்டு ஆங்காங்கே கிடந்துள்ளது உள்ளதாக கூறப்படுகிறது.
இதை பார்த்ததும் பதறி அடித்து சினேகா கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விசாரித்துள்ளனர். அப்போதும் குழந்தை காணமல் போனதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அப்பகுதியில் குடுகுடுப்பைக்காரன் தோற்றத்தில் ஒரு நபர் வந்து சென்றதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து அந்த மர்ம நபர் குழந்தை தூக்கி சென்று இருக்கலாம் என்று நினைத்து உடனடியாக கம்பம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணையை துவக்கினர்.
பின்னர் கம்பம் நகரில் சுற்றி திரிந்த குடுகுடுப்பைக்காரன் தோற்றத்தில் இருக்கும் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவிலை, இதனால் காவல்துறையினர் நாலாபுரமும் தீவிரமாக குழந்தை தேடி வந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தேடி வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக, வீட்டிற்குள் சென்று அங்கிருந்த தண்ணீர் டிரம்களில் பார்த்து உள்ளனர்.
அங்கு தண்ணீரில் மூழ்கி நிலையில் குழந்தை இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், குழந்தையை கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து குழந்தையை சேர்த்து போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை கூடத்தில் கொண்டு சென்று வைத்துள்ளனர்.
இதற்கிடையே குழந்தையின் தந்தை மணிகண்டன், தாய் சினேகா, பாட்டி சரஸ்வதி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் கம்பம் நகரில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குலசை தசரா திருவிழா கோலாகலம்.. காளி உள்ளிட்ட வேடமணிந்து பக்தர்கள் வேண்டுதல்!