தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்குட்பட்ட 29ஆவது வார்டு விவேகானந்தர் தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வசித்துவரும் அப்பகுதியில், வடிகால் வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதனால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்கூர் பாளையம் வழியாக வெளியேறி ரேஞ்சர் அலுவலக சாலை வழியாகச் சென்று சாக்கடை கால்வாயில் கலந்தது.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் தனது இடத்தின் வழியாக கழிவுநீர் செல்வதாகக் கூறி வழித்தடத்தை ஆக்கிரமித்து அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதியின் சாலை ஓரத்திலேயே தேங்கி நிற்கிறது.
மேலும் தேங்குகிற கழிவுநீரில் கொசுக்கள், புழுக்கள் உருவாவதால் தங்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதால் நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதியினர் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய கம்பம் நகராட்சி ஆணையர், சுகாதார அலுவலர் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது கம்பம் பகுதியில் பெய்துவரும் மழையால் சாலையில் தேங்குகிற நீரால் மேலும் நோய் பரவும் சூழல் உள்ளதால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சாரல் மழையில் குடையைப் பிடித்தவாறு காவல் நிலையத்தில் கூடிய பெண்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கீதா உறுதி அளித்ததையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.