தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதி(36). இவரது கணவர் பெரியசாமி. இவர் தேனியில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார். இவர்களுக்கு ராஜேஸ்வரி(12), முகேஷ்(8) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
கணவரின் சித்ரவதையால் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்த பெண் இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று தனது இரு குழந்தைகளுடன் வந்த ஜோதி, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். அங்கு பணியிலிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது கணவர் பெரியசாமிக்கு தேனியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் சில மாதங்களாக தொடர்பு ஏற்பட்டதால், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், இதுகுறித்து ஏற்கனவே மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பின்னர் தன்னுடன் சரியாக குடும்பம் நடத்தி வந்துள்ளதாக ஜோதி கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் அப்பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி தன்னை சித்ரவதை செய்வதுடன், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே தனக்கும், தனது குழந்தைகளுக்கும் கணவரால் அச்சுறுத்தல் இருப்பதாக வேதனை அடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இது சம்பந்தமாகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.