தேனி: தேனி மாவட்டம் பொம்மையைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரியா, ராஜமணி, தமிழரசி, மலர்விழி ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழு அமைத்து, அப்பகுதி பொதுமக்களை குழுவில் இணைத்து பணத்தைப் பெற்று சீட்டு நடத்தி வந்துள்ளனர்.
ஐந்து குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைவி என்று நியமித்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை மகளிர் சுய உதவிக் குழுவில் இணைத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக இதனை அவர்கள் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களின் சேமிப்பு பணம் 3 ஆண்டுகளில் பிரித்து கொடுக்கப்பட வேண்டிய நிலையில், பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து குழுத் தலைவிகளிடம் கேட்டதற்கு, தங்களை தகாத வார்த்தையில் பேசி பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து, தங்களின் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகக் கூறி ஜெயப்பிரியாவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டி இருந்த நிலையில், வீட்டின் முன்பு அமர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.